நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த தயா குற்றப்புலனாய்வு பிரிவினரிடம்

புகலிடம் மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 48 வயதான தயான் அந்தோனி எனப்படும் அன்பு என்ற நபர் இன்று 26ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன தெரிவித்தார்.

2010ம் ஆண்டு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்நபர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்று புகலிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட தயான் அந்தோனி எனப்படும் “அன்பு” அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினார்.

2010 ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு தனது சாட்சியினை வழங்கியிருந்தார்.

அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில், விசாரணை முடிவுறும் வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு, அவுஸ்திரேலிய அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும், அவுஸ்திரேலியா இவரை நாடு கடத்தியுள்ளது.

2009 ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த காலத்தில் வன்னியில் சேரன் வாணிபத்தின் கொள்வனவுப் பிரிவில் வேலைசெய்து வந்த தயான் என்ற குறித்த இளைஞன், முள்ளிவாய்க்கால் சமரின் பின்னர் இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.

இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மனநிலை குன்றிய அன்பு இராணுவ முகாமிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுதலையாகிய பின்னர் அவர் இலங்கையில் தனது பாதுகாப்பிற்று அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச்சென்றார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி மீண்டும் இவருக்கான பிடியாணையை இலங்கை அரசு வழங்கியுள்ளமையும், தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply