ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பான வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வி

ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு 162 மில்லியன்  அமெரிக்க டொலரும் வட்டியும் வழங்கப்பட வேண்டும் என லண்டன் நீதிமன்றமொன்று அளித்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடுத்த மேன்முறையீட்டு வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியுற்றுள்ளது.

‘எமக்கு எதிராக உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ, ரோய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

”முதலில் இந்த உத்தரவு என்ன என்பதை வாசிக்க வேண்டும். அதன்பின்னர் (பிரிட்டனின்) பிரபுக்கள் சபையில் மேன்முறையீடு செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வோம்’ என அவர் தெரிவித்தார்.

பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், ‘மேன்முறையீடு செய்வது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நாம் கலந்தாலோசித்து வருகிறோம்’ என்றார்.

2007 இல் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துகொண்டிருந்தபோது வங்கிகளிடம் இழப்பீடு பெறும் வகையில் ஹெஜிங் உடன்படிக்கைசெய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்தது.

ஆனால், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் உடன்படிக்கை செய்துகொண்ட வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பணம் வழங்கும் வகையில் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது.

பிரிட்டனை தளமாகக் கொண்ட ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி, சிட்டி பாங்க், டொச் பாங்க் உட்பட 5 வங்கிகளுடன் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

2008 ஜூலையில் உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 147 டொலர் வரை உயர்ந்த நிலையில் இந்த உடன்படிக்கை மூலம் சி.பி.சி. நன்மை பெற்றது. ஆனால் அதே வருட பிற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 40 டொலரைவிட குறைந்ததால் பெருந்தொகை பணத்தை வங்கிகளுக்கு சி.பி.சி செலுத்த வேண்டியிருந்தது.

இந்த உடன்படிக்கையின்படி பணத்தை வழங்க சி.பி.சி  மறுத்ததாக குற்றம் சுமத்தி, ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply