உரிய தீர்வின்றி பணிக்கு திரும்ப முடியாது – விரிவுரையாளர்கள்

தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை கடமைக்கு சமூகமளிக்கப்போவதில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 30ஆம் திகதி கடமைக்கு திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.

தங்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்காக அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரச தரப்பிலிருந்து எவரும் முன்வரவில்லை என்றும் விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இத்தகைய நிலைமையின் கீழ் தமது உறுப்பினர்கள் மீள கடமைக்குத் திரும்புவதற்கு விரும்பவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் தமது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்க தரப்பிலிருந்து முன்வரவேண்டும் என்றும் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டார்.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு ஜூலை மாதம் 30ஆம் திகதி கடமைகளுக்கு திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிக்கையொன்றின் மூலம் நேற்று அனைத்து பேராசிரியர்கள், கலாநிதிகள் மற்றும் விரிவுரையாளர்களிடம் கோரிக்கை வி்டுத்திருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply