இலங்கையில் தோட்டக் காணிகள் பகிர்வில் தொழிலாளர் புறக்கணிக்கப்படலாம் என்று அச்சம்
இலங்கையின் மலையகத்தில் தோட்ட தரிசு நிலக் காணிகளை பகிரும் போது அவை மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் நீதி மற்றும் சட்ட உருவாக்க துணை அமைச்சரான புத்திரசிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அனைவரும் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் இந்தக் காணிகள் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றும் புத்திரசிகாமணி கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் மலையக தோட்டக் காணிகள் பகிரப்பட்டபோது அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு அல்லாமல், வெளியாருக்கு வழங்கப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகக் கூறும் புத்திரசிகாமணி, 1975 ஆம் ஆண்டில் இப்படியான ஒரு முயற்சி, மலையகத் தலைவர்கள் கட்சி பேதமின்றி போராடியதால் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது பல தோட்டங்களில் தரிசு நிலங்கள் பற்றிய தகவல்கள் அரசாங்க தரப்பினரால் பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மலையக அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் உட்பட அனைவரும் கட்சி பேதமின்றி இணைந்து இதற்காக நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply