துமிந்தவை கைது செய்யாதது ஏன்? ஜனாதிபதி சட்டத்தரணி பகிரங்க கேள்வி
துமிந்த சில்வாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள போதிலும் இரகசிய பொலிஸார் அவரை ஏன் கைதுசெய்யவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரிரந்த வலலியத்த நீதிமன்றத்தில் இன்று பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.
பாரத்த லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பான முறைப்பாடு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
16 சந்தேகநபர்கள் இன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன், இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் கலந்துரையாடிய போதிலும் இதுவரை ஆலோசனை வழங்கப்படவில்லை என, விசாரணைகளின் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்திய இரகசிய பொலிஸாரின் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவுடன், ஆஜரான பிரதான பொலிஸ் பரிசோதகர் மெரில் ரஞ்ஜன் லமாஹேவா குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற இடத்திலிருந்து துமிந்த சில்வா மற்றும் பாரத்த லக்ஷ்மனுக்கு சொந்தமான வாகனங்கள் இரண்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு குண்டுகளின் பகுதிகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா சந்தேகநபராக பெயரிடப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ள போதிலும் அவர் ஏன் கைதுசெய்யப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரிரந்த வலலியத்த வினவினார்.
இந்த முறைப்பாட்டை விசாரிக்கும் நீதவான் இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமை தொடர்பில் அறிந்திருக்காத நிலையிலேயே ரிரந்த வலலியத்த இவ்வாறு கேள்வி எழுப்புவதாக துமிந்த சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
துமிந்த சில்வாவிற்கு இந்த மாத இறுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அவர் இலங்கைக்கு திரும்பும் தினம் தொடர்பில் வைத்தியர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் துமிந்த சில்வாவை கைதுசெய்வதற்கு இன்டர்போலுக்கு பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரிரந்த வலலியத்த நீதிமன்றத்தைக் கோரினார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் கே.ஏ.ஜீ.புஞ்சிஹேவா, சந்தேகநபர்களை எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், குறித்த தினம் இந்த முறைப்பாடு தொடர்பில் மீண்டும் விசாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply