இந்தியா – பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை
அமைதி மற்றும் வர்த்தகம் தொடர்பான நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் எம்.பி.க்கள் குழு இன்று இந்தியா சென்றுள்ளது. வாகா எல்லை வழியாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் குழுவினர் கல்வி, வர்த்தகம் மற்றும் சுகாதார துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் எல்லைப்பிரச்சினை போன்ற விஷயங்கள் பற்றி இந்த சந்திப்பின்போது இந்தியக் குழுவினருடன் விவாதிக்க உள்ளனர்.
இவை தவிர இந்தியா-பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான 4-வது கட்ட சந்திப்பும் நடக்க உள்ளது.
உள்நாட்டு வர்த்தகத்தில் பாகிஸ்தான் முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்க சமீபத்தில் இந்தியா முடிவு செய்ததே இந்த சந்திப்பின் பின்னணியாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் குழுவினரின் வருகை பற்றிப் பேசிய அந்நாட்டு ஆளுங்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜகாங்கிர், ‘இருநாடுகளின் அரசுகளும் ஏற்படுத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தையை நாங்கள் முன்னெடுத்து சென்று தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் வர்த்தகத்தை விரைவுபடுத்துவோம்’ என்றார்.
இந்த சந்திப்பு பற்றி கூறிய பாகிஸ்தான் தேசிய கட்சி தலைவர் ஹஜி முகமது, ‘இருநாடுகளுக்கிடையே பல வருடங்களாக நிலவிவரும் பிரச்சினைகளைக் களைந்து, நட்புறவை வலுப்படுத்த கால அவகாசம் தேவை.
எனினும், இருநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பு அதிகரித்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். எந்தவித விசா பிரச்சினையுமின்றி இந்தியா-பாகிஸ்தான் மக்கள் எல்லைப்பகுதியில் நடமாட முடிந்தால், தண்ணீர் பிரச்சினை, சியாச்சின், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் அன்றே தீர்ந்துவிடும்’ என்றார்.
பாகிஸ்தானின் அனைத்து முக்கிய கட்சிகளின் எம்.பி.க்களும் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply