வடக்கு மக்களை தவிக்கவிடும் வரட்சி
வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் பவுசர் வண்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் போதிய அளவு நீரைப் பெற முடியாதிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றார்கள்.
வன்னியில் மல்லாவி போன்ற கிராமிய-நகரப் பகுதிகளிலும் தண்ணீருக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் பணம் செலவழித்து தூர இடங்களில் இருந்து தண்ணீரைப் பெற வேண்டியிருப்பதாகவும் அங்குள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் வரட்சியினால் கிணறுகள் வற்றியிருப்பதுடன் பல கிணறுகள் உப்பு நீராகியிருப்பதனால் அங்கு நிலைமை மோசமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.
அதிகாரிகள் பவுசர் வண்டி மூலமாக அங்கு நீர் விநியோகம் செய்து வருகின்ற போதிலும் நிலைமை சிரமமாக இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளும் மீனவர்களும் கவலை
மன்னார் மாவட்டத்தின் பெரிய குளமான கட்டுக்கரைக்குளம் நீரின்றி வரண்டிருக்கின்றது. இதனால் அதன் கீழுள்ள பெரும் எண்ணிக்கையான குளங்களும் வற்றிக்கிடக்கின்றன.
1400 ஏக்கர் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது. நன்னீர் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டிருப்பதனால் பல குடும்பங்கள் வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மொகமட் ரியாஸ் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வரட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கென 39 லட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிதியைப் பயன்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் மன்னார் மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சுகுணதாஸ் கூறுகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துணுக்காய் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாக துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் செல்லையா அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply