அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு விமர்சிக்கக் கூடாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை தரும் விடயங்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும். தவிர அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்கக் கூடாது எனப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் 15ஆவது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற இந்த மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
அரசு முன்வைத்துள்ள திவிநெகும சட்டவரைவைப் பற்றி பூரண அறிவை பெற்றிராதவர்கள் ஜனாதிபதியையும் அரசையும் இந்தத் திட்டத்தையும் எதிர்த்து வருகின்றனர். இந்த திவிநெகும சட்டவரைவில் சமுர்த்தி அதிகாரசபையும் உள்வாங்கப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களம் அமைப்பதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெறும் அனைத்துச் சலுகைகளையும் நன்மைகளையும் பெற்றுக்கொள்வார்கள்.
இதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வூதிய உத்தியோகத்தர்களாக மாறுகின்றனர். இந்த திவிநெகும திணைக்களத்தின் மூலம் வறிய மக்கள் நன்மை பெறக் கூடிய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2005, 2010ஆம் ஆண்டுகளினுடைய மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக மக்கள் சிறந்த பயன்களை அடைந்து வருகின்றனர். ஆனால் இன்று நல்லவற்றையும் தீயவைகளாக எதிர்த்து வரும் சில தீய சக்திகள் இந்த நன்மையளிக்க கூடிய திவிநெகும திட்டத்தினை எதிர்த்ததன் காரணமாக இந்த சட்டவரைவு நிறைவேற்றம் சற்று பின்தள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த திவிநெகும சட்டவரைவை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளும் முழு ஆதரவினை வழங்கியுள்ளன. இதனால் மிக விரைவில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் நன்மை பெறுவார்கள் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply