இலங்கை நீதிபதிமார் இன்று பணிப் புறக்கணிப்பு
இலங்கையில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குலைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை நீதிமன்ற கடமைகளை புறக்கணிக்கவுள்ளதாக நீதிபதிமார் அறிவித்துள்ளனர். நீதிச்சேவேகைள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண, கொழும்பின் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் சென்.தோமஸ் கல்லூரிக்கு அருகில் வைத்து ஆயுததாரிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மனைவி மற்றும் மகனை கல்லூரியில் இறக்கிவிட வந்திருந்த மஞ்சுள திலகரட்ண காரில் அமர்ந்திருந்தபோதுஇ அருகில் வந்தவர்கள் கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரை அடித்துத் தாக்கி விட்டு அவரது கைத்தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகத்திலும் வலது கையிலும் காயங்களுக்குள்ளான நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த தாக்குதலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பும் கண்டித்துள்ளன.
இந்தத் தாக்குதலை அரசின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களின் ஆட்களே நடத்தியிருப்பதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இதேவேளை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான இன்றைய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துமனையில் உள்ள மஞ்சுள திலகரட்ணவை பார்க்கச்சென்ற நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருத இடமிருப்பதால் அதுபற்றி அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்தும் என்று ரவூப் ஹக்கீம் இங்கு தெரிவித்தார்.
நீதித்துறையின் சுதந்திரத்துக்கு இந்த அச்சுறுத்தலை அடுத்து இலங்கை நீதிபதிமாரின் சங்கம் அவசரமாக இன்று கூடி இன்று தினம் கடமைகளை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏகேஎம் பட்டபெந்திகே கூறினார்.
மாஜிஸ்ட்ரேட் நீதவான்மார் மட்டும் திடீர் மரண விசாரணைகள் தடுப்புக்காவல் நீடிப்பு மற்றும் 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்தபடவேண்டிய சந்தேகநபர்களுக்கான விசாரணைகள் போன்ற அவசிய கடமைகளை புரிவார்கள் என்றும் செவ்வாய்கிழமை கூடவுள்ள நீதிபதிமார் சங்கத்தின் பொதுச்சபை அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிக்கும் என்றும் பட்டபெந்திகே தெரிவித்தார்.
இலங்கையின் நீதித்துறையில் அதியுயர் இடத்தில் இருக்கின்றவர் முதற்கொண்டு நீதிச்சேவையில் உள்ளஅனைவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஒரு வாரத்துக்கு முன்னர் தான் இன்று தாக்குதலுக்குள்ளான மஞ்சுள திலகரட்ண ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்கு முன்னதாக இலங்கையின் ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்றுத்துறை நாட்டின் நீதித்துறை விவகாரங்களுக்குள் தலையிடுவதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதேவேளை அதிகாரிகள் நாட்டின் நீதித்துறைக்குள் தலையிடுவதைக் கைவிடவேண்டுமென்று வலியுறுத்தி கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள்.
அதேகோரிக்கையை வலியுறுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஏற்கனவே தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழு என்பது நீதிபதிகளின் நியமனம், பதவிஉயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று விசாரணைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பொறுப்பானது.
அண்மைக்காலமாக இலங்கையின் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுத்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அண்மையில் வடக்கே மன்னார் நீதவானை கெபினட் அமைச்சர் ஒருவர் நேரடியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி பல நாட்களாக இலங்கையில் நீதித்துறை செயற்பாடுகள் முடங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply