காந்திக்கு ‘தேசப் பிதா’ பட்டம் வழங்க சட்டத்தில் இடமில்லை: இந்திய அரசு

இந்தியாவின் ‘தேசப் பிதா’ மகாத்மா காந்தி என்று இதுவரை காலமும் அனைவராலும் கூறப்பட்டுள்ள போதிலும் அவருக்கு ‘தேசப் பிதா’ பட்டம் வழங்க இந்திய சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  ‘லக்னோவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான ஐஸ்வர்யா பராசரிடம், அவருக்கு கற்பிக்கும் ஆசிரியை, இந்தியாவின் தேசப் பிதா யார்? என வினவியுள்ளார். அக்கேள்விக்கு குறித்த எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இக்கேள்விக்கு தானே பதிலளித்த ஆசிரியை, இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி என தெரிவித்துள்ளார். ஆசிரியையின் பதிலை மறுதளித்த அந்த மாணவி, இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்தி என எப்போது அறிவிக்கப்பட்டது? அது எந்தச் சட்டத்தில் இருக்கிறது? என ஆசிரியையிடம் திருப்பி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனையடுத்து மகாத்மா காந்தி தேசப்பிதாவா? இல்லையா? என்ற விவகாரம் சூடு பிடித்தது. இது தொடர்பில் கண்டறிந்துகொள்வதற்காக அக்கேள்வி கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது. அதற்குரிய பதில் கிடைக்காமையினால் அக்கேள்வி மாநில, மத்திய அரசாங்கங்களுக்கு கைம்மாறப்பட்டது. இறுதியில் அக்கேள்விக்கு பதிலளிக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் அதற்கான பதில் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை.

இந்நிலையில், மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு மாணவி ஐஸ்வர்யா பராஷர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எனவே தனது கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மாணவி ஐஸ்வர்யாவின் விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில், ‘கல்வி மற்றும் இராணுவம் தவிர பிறவற்றுக்கு எந்த பட்டமும் வழங்க அனுமதி இல்லை என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 18(1)இல் கூறப்பட்டுள்ளது.

எனவே, மகாத்மா காந்திக்கு தேசப்பிதா என்ற பட்டம் வழங்க முடியாது. எனவே மாணவியின் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply