இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், தாக்குவதும், சிறைபிடித்துச்செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு ஏற்பட வில்லை.  இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர். உடனே மீனவர்கள் தாங்கள் கடலில் விரித்த வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தனர்.

அதற்குள் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் இறங்கினர். ஒவ்வொரு படகிலும் ஒரு ஓட்டுநரும், 3 மீனவர்களும் இருந்தனர். இதில் 3 படகுகளில் இருந்த ஓட்டுநர்களை விட்டுவிட்டு, மீனவர்கள் செந்தில், லோகு, வெள்ளைச்சாமி, சகாயம், திவாகர், எஸ்லோன் உள்பட 9 பேரை பிடித்து தங்களது கப்பலில் ஏற்றினர்.

பின்பு, படகு டிரைவர்களிடம் தங்களது கப்பலை பின்தொடர்ந்து வரும்படி கூறினர்.

இதையடுத்து 9 மீனவர்களுடன் இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டை நோக்கி கப்பலை செலுத்தினர்.

ஆனால், 3 படகுகளின் ஓட்டுநர்களும் படகை ராமேஸ்வரம் நோக்கி செலுத்தினர். நேற்று மாலை அவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர். தங்கள் படகில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தகவலை அவர்கள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முடிவே கிடையாதா என கேள்வி எழுப்பினர். சிறைபிடித்துச் செல்லப்பட்ட 9 மீனவர்களையும் உடனே மீட்டுத்தருமாறு, மத்திய-மாநில அரசுகளை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply