சாண்டி சூறாவளியினால் 40 பேர் பலி! துக்கத்தில் மூழ்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை நேற்று முன் தினம் இரவு கடுமையாக தாக்கிச்சென்ற சாண்டி சூறாவளியால், சுமார் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயோர்க்கில் மாத்திரம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. சுமார் 18,000 விமானங்கள் தொடர்ந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நியூயோர்க் – நியூஜேர்சி இடையே சொற்ப அளவிலான போக்குவரத்துக்கள் மாத்திரம் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களை நிறுத்திவிட்டு, நியூ ஜேர்சியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்றுள்ளார்.

சாண்டி புயல் தெற்கில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து, அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு வேர்ஜினியாவில் கடும் பனிப்பொழுவும் ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் அமெரிக்காவை கடந்து கனடா நோக்கி பயணித்துள்ளது. புயலின் வேகம் வீழ்ச்சி அடைந்துள்ள போதும், தொடர்ந்து கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மில்லியன் வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன மின்சாரமின்றி கடும் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மின்சாரத்துறை அமைசகம் அறிவித்துள்ளது.

சாண்டி புயலின் தாக்கத்தால் கடல் கொந்தளித்து தரைக்கு வந்ததை அடுத்து, மேன்ஹட்டனின் 14 அடி உயரத்திற்கு கடல் நீர் தரையில் புகுந்திருந்ததாகவும், முன்னைய பதிவுகளுடன் ஒப்பிடுகையில் இதுவே சாதனை பதிவாகும் எனவும் தேசிய காலநிலை சேவை மையம் அறிவித்துள்ளது.

சாண்டி புயல்ල நாம் எதிர்பார்த்திடாத மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தி சென்றுள்ளது என நியூயோர்க் மேஜர் மைகேல் புலூம்பேர்க் அறிவித்துள்ளார். தற்போது பாதிப்படைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் கரிபியன் தீவுகளில் சாண்டி ஏற்படுத்திய தாக்கத்தால் சுமார் 70 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply