இலங்கையில் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வு

மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிழந்துள்ளார்கள். சுமார் 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பிற அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமையுமும் இன்று செவ்வாய்க்கிழமையுமாக கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

ஆட்கள் உயிரிழந்த மற்றும் காணாமல் போன சம்பவங்களைப் பொறுத்தவரை அநேகமானவை மண் சரிவினாலேயே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழிவதால் குளங்களின் வான் கதவுகளும் (மதகுகளும்) திறந்து விடப்பட்டதன் காரணமாகவே வீதிகளில் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வீதிகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் ரயில் மற்றும் தரை வழிப் போக்குவரத்துச் சேவைகளும் தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ளது.

வெள்ளத்தால் சூழப்பட்ட வேற்றுச்சேனை மற்றும் மயிலவெட்டுவான் உட்பட சில கிராம மக்கள் படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அடுத்து காணாமல்போயுள்ளனர்.

வீதிகளில் வெள்ள நிலைமை காரணமாக உள்ளுர் மற்றும் வெளியூர் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதால், நிவாரணப் பணியாளர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply