ஷிராணிக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மொஹான் பீரிஸ் கைகளில்

இலங்கையில் பதவிநீக்கப்பட்ட தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான நாடாளுமன்றக் கண்டனத் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவற்றை புதிய தலைமை நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்கு உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தன.

இந்த மனுக்கள் நீதிமன்றத்துக்கு வந்தபோது கருத்துமுன்வைத்த அரசதரப்பு சட்டத்தரணி, ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னால் மனுக்களை விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதுதொடர்பான தீர்மானமொன்றை எடுப்பதற்காக மனுக்களை புதிய தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் முன்னால் சமர்ப்பிக்குமாறு அரசதரப்பு சட்டத்தரணி கூறினார்.

ஆனால்இ அந்த கோரிக்கைக்கு ஆட்சேபணை தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள், புதிய தலைமை நீதியரசரின் நியமனம் சட்டத்துக்கு புறம்பாக நடந்துள்ளது என்றும் குறித்த மனுக்களை விசாரிப்பதற்கு அவருக்கு அதிகாரங்கள் இல்லையென்றும் வாதிட்டனர்.

எனினும் அரசதரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுக்களை புதிய தலைமை நீதியரசரிடம் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானித்தனர்.

இதேவேளை, பதவிநீக்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க மீதான கண்டனத் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்ட சட்டத்தரணிகள் மீது விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல்களைக் கண்டித்து மக்களின் கையொப்பங்களை சேகரிக்கும் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற வளாகம் முன்பாக சட்டவாதிகள் ஒன்றியம் இந்தப் போராட்டத்தை நடத்தியது.

இதேவேளை, புதிய தலைமை நீதியரசரின் வரவேற்பு விழாவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கலந்துகொள்ளாது என்றும் மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply