ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தீர்மானங்களை ஏற்கமுடியாது : கெஹெலிய
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தன்னிச்சையாக முன்வைக்கப்படும் தீர்மானங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ முடியாது. இலங்கை அடிமை நாடல்ல என்பதனை பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,ஜெனீவாவில் தற்போது நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் தீர்மானங்களையும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் முன்வைத்தன. அதேபோன்று மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எவ்விதமான அடிப்படைத்தன்மையும் அற்ற வகையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
இது இலங்கைக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடாகும். இலங்கையின் நிலைப்பாடு குறித்து இன்று எமது விஷேட பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் விளக்கமளிப்பார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையின் உள்நாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. எவ்விதத்திலும் இலங்கை பொறுப்புடைமையை தவறவிடவில்லை என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே, ஜெனீவாவில் முன்வைக்கப்படுகின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை அரசு ஏற்றுக்கொள்ளாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply