அமைச்சர் ஆறுமுகனுக்கும் பொலிஸாருக்கும் எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்வேன் : அமைச்சர் வாசு
கொட்டக்கலையில் இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அதன் உறுப்பினர்களும் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொட்டகலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளேன். குறித்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை அனைவரும் அறிவர். எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதிராக நான் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளேன்.
இச் சம்பவம் குறித்து நான் உடனடியாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதேவேளை, குற்றவாளிகளை கைது செய்வதில் பொலிஸார் நேர்மையாக செயற்படாமையானது கவலையளிக்கும் செயற்பாடாகும். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். எனவே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது குண்டர்களை அனுப்பி அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை குழப்பியமை தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யவுள்ளேனென அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply