வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ஆராய்ந்து உச்ச நன்மைகளை பெற திட்டம் அவசியம்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சர்வதேச நாடுகளுடன் கையொப்பமிடப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் மூலம் உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.இத்தகைய உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவது மட்டுமன்றி அவற்றை நடைமுறைப்படுத்துவது முக்கியமென குறிப்பிட்ட ஜனாதிபதி; அதற்கென விசேட அதிகாரியொருவரை நியமித்து அந்த உடன்படிக்கைகளில் உச்ச பலனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார். நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் செயற்பாட்டு முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் மேற்படி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது இப்பணிப்புரையை விடுத்த ஜனாதிபதி கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறுக்கான பிரதிபலனை தற்போதைய அரசாங்கம் சுமக்க நேர்ந்துள்ளதாகவும் மின்சாரத் துறையில் கடந்த காலத்தில் மேற்கொள் ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் தற்போதைய அரசாங்கம் வகை சொல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க உட்பட அமைச்சின் செயலாளர்கள், உயரதிகாரிகள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள், பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நீர்ப்பாசனம் நீர் முகாமைத்துவப் பிரிவு, உமாஓய திட்டம், மஹாவலி அதிகார சபை, நீர்வளங்கல் சபை உட்பட அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள், திணைக்களங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களான தெதுறு ஓயா திட்டம், ரம்புக்கன் ஓய திட்டம் ஆகியவை இவ்வருடத்தின் நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படவுள்ளமை தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.

அரசாங்க சுற்றறிக்கைகள் வெளியிடுவது செயற்றிட்டங்களை இடை நிறுத்துவதற்கன்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காகவே என இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி: சகல பொறுப்பையும் ஒருவரே சுமந்து கொண்டு திண்டாடாமல் ஏனைய அதிகாரிகளுடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டு செயற் படுவதற்குப் பழக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கணக்கறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

அதேவேளை, அமைச்சரவை மேற் கொள்ளும் தீர்மானங்களை சில அமைச் சுக்களின் செயலாளர்கள் கவனத்திற் கொள்வதில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பில் அவர்களிடம் வினவும் போது அவ்வாறானதொரு தீர்மானம் தமக்குக் கிடைக்கவில்லை என்றே பதில் கூறுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

குளங்கள் மற்றும் நீர் ஊற்றுக்களின் பாதுகாப்பு, நீர்ப்பாசன வலயங்களைப் பாதுகாத்தலுக்கான அவசியத்தை வலியுறுத் திய ஜனாதிபதி அவ்வாறான பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள், நிர்மாண நடவடிக்கைகள், காணிகளைப் பெறல் போன்றவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

மேற்படி நீர்வள பிரதேசங்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளை ஒன்றிணைந்து அதற்கென அமைச்சரவை உபகுழு ஒன்றை நியமிப் பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந் தப்பட்டோரை கேட்டுக்கொண்ட ஜனாதி பதி: நீர்ப்பாசனத்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் போது நன்னீர் மீன் வளங்களைப் பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்து மாறும் பணிப்புரை விடுத்தார்.

நிர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச் சின் கீழுள்ள நிறுவனங்களில் பழைய வாகனங்கள் பல நீண்டகாலமாக விற்பனை செய்யாமல் துருப்பிடித்து வருவதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவற்றை ஏலத்தில் விற்பனை செய்ய முடியாவிட்டால் இரும்புக்காக அவற்றை விற்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் மஹாவலி பிரதேசங்களில் இத்தகைய வாகனங்கள் பிரயோசனமின்றிக் கிடப்பதையும் ஜனாதிபதி ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்.

அரசாங்கத்தின் இயந்திர உபகரணங்கள் சில நிறுவனங்களினால் தனியாரின் உபயோகத்திற்கு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி: அவ்வாறு வழங்கப்பட்டால் அதற்கான கட்டண மொன்றை அறவிடுமாறும் தெரிவித்தார். அவற்றை இலவசமாக வழங்கினால் இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவரலாம் எனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல செயற்பாடுகள் இதனால் அவதூறுகளுக்கு உள்ளாக்கப் படலாம் என்றும் தெரிவித்தார்.

கொத்மலை உட்பட சில நீர்த்தேக்கங்களில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக பத்திரிகைகளில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் திருத்தத்தை உரிய பத் திரிகைகளில் அதன் பிரதம ஆசிரியர்களோடு கலந்துரையாடி பிரசுரிக்க ஆவண செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி அமைச்சின் செயலாளரைக் கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply