சட்டமா அதிபர் பக்கச்சார்புடன் நடக்கிறார் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் சட்டமா அதிபர் பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற சந்தேகநபரை ஒரு மாதகால சிறைத்தண்டனையின் பின்னர் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் இணங்கியதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இந்த சந்தேகநபர் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் என்றபடியாலேயே அரசாங்கம் அவருக்கு சார்பாக நடந்துகொண்டுள்ளதாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பணபலமும் அரசியல் செல்வாக்கும் கொண்ட சந்தேகநபர்களுக்கு அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்குவதையே இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறே, அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் சாதாரண கைதிகளுக்கு இவ்வாறான சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ கூறினார்.

பயங்கரவாதத்தை எதிர்க்கின்ற, தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்ளும் சந்தேகநபர்களுக்கு குறைந்த தண்டனைகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிப்பதாக சட்டமா அதிபர் அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏராளமான தமிழ்க் கைதிகள் குற்றங்களை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வு பெறுவதற்கு தயாராக இருக்கின்ற போதிலும் அவர்கள் இன்னும் சிறைகளில் வாடுவதாகவும் அவர்களின் தண்டனைகளை குறைப்பது பற்றி சட்டமா அதிபர் கரிசனை காட்டவில்லை என்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply