இசைப்பிரியா தொடர்பில் சனல் 4 நிறுவனம் புதிய காணொளி வெளியீடு நாடகம் இராணுவப் பேச்சாளர்
இறுத்திக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா தொடர்பான புதிய ஆதாரமொன்றை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இறுதிகட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவர் உயிருடன் பிடிபட்டு கொண்டு செல்லப்படும் காணொளி ஆதாரத்தையும் சனல் 4 நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரம் ஒரு நாடகம் ஆகுமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய மறுத்துள்ளார். அத்துடன் சனல்4 வெளியிட்ட காணொளி ஆதாரத்தின் பிரகாரம் கடற்கரையொன்றில் மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை சீருடைதரித்ததோர் வெள்ளைத் துணியொன்றை அவர்மீது போர்த்தி அவரை இழுத்து வரும் காட்சி பதிவாகியுள்ளது. அத்துடன் சீருடையணிந்த் அறுவர் இசைப்பிரயாவை பிடித்து வருவதும் அதன்போது பிரபாகரனின் மகள் என்று இசைப்பிரியாவை சுட்டிக்காட்டி கூறுவதும் அதற்கு இசைப்பிரியா ஐயோ அது நான் இல்லை என்று அழுவதும் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் காட்சியாக பதிவாகியுள்ளது.
அத்துடன் வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும் துணி அகற்றப்பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் சடலம் கிடந்த காட்சிகள் ஏற்கனவே சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் காணொளியாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலக நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ள இருக்கின்ற பொதுநலவாய உச்சிமாநாடு நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் ஒரு அழுத்தமாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 புதிய வீடியோ செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது.
இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேர்ணல் இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபா என்ற 27 வயது இளம்பெண், இறுதிக்கட்ட போரின்போது தப்பிச்செல்ல முற்படுகையில் இராணுவத்திடம் உயிருடன் பிடிபடும் காட்சியையே வெளியிட்டுள்ளதாக சேனல் 4 செய்தியாளர் கலம் மக்ரே கூறியிருக்கிறார்.
அந்தக் காட்சியில் மேலாடை இல்லாத நிலையில் சேறு நிரம்பிய குட்டையொன்றுக்குள் இருந்து வருகின்ற இளம்பெண்ணின் உடம்பை இராணுவத்தினர் வெள்ளைத் துணியொன்றால் மூடி அழைத்துச் செல்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள்தான் அவர் என்று மற்ற இராணுவச் சிப்பாய்கள் கோசமிட, அதற்கு ‘ஐயோ அவர் நானில்லை’ என்று அந்தப் பெண் கூறுகின்ற காட்சிகளே சேனல் 4 வில் புதிதாக வெளியாகின.
பொதுநலவாய மாநாடு
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிர்வாணகோலத்தில் கொல்லப்பட்டுள்ள அவரது சடலத்தின் படங்களை சேனல் 4 ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில், பிடிபடும்போது காயங்கள் எதுவுமின்றி இருக்கின்ற இசைப்பிரியா, பின்னர் குழியொன்றுக்குள் மயங்கிய நிலையில் அல்லது பெரும்பாலும் உயிரிழந்துவிட்ட நிலையில் காணப்படுவதாக சேனல் 4 செய்தியாளர் கூறுகிறார்.
பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாகி முகத்தில் மோசமான காயங்களுடன் இசைப்பிரியா இறந்துகிடக்கும் ஏற்கனவே வெளியான காட்சியையும் சேனல் 4 இதனுடன் காட்டியிருக்கிறது. அதனுடன் தொடர்புடையவாறு ஏற்கனவே வெளியான, நிராயுதபாணிகள் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணகோலத்தில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளும் உள்ளன.
ஏற்கனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்றுகூறி கனடா பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமரும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்த வண்ணமுள்ளன.
பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரோனும் இலங்கையின் உரிமைப் பிரச்சனையை பொதுநலவாய மாநாட்டில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுநலவாய மாநாட்டுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், தாம் வெளியி்ட்டுள்ள புதிய ஆதாரம் உலகநாடுகளின் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று சனல் 4 கூறியிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் அதுகுறித்து சுயாதீனமான விசாரணைகளை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையளர் நவநீதன் பிள்ளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
சரத் பொன்சேகா
உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறுகையில்,
’12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத்தலைமையகத்தில் இருக்கவேண்டும். கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூறமுடியும்’ என்றார்.
இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்துபார்த்துதான் மறுக்கமுடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இராணுவம் மறுப்பு
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இராணுவம் மறுத்துள்ளது. சனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
‘இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கேர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. நாங்கள் உயிரோடு பிடித்த 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் இசைப்பிரியா அவர்களுடன் இருக்கவில்லை’ .
குறித்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரையாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழிநுட்ப ரீதியில் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு நாடகம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்’ ‘
இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான காணொளிகளை சனல் 4 கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறான வீடியோ காட்சிகளை சனல் 4 வெளியிட்டிருந்தது, அவை பொய்யானவை என்றும் வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்
சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்மையில் இந்தப் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ளும் தேவை இருந்தால், இலங்கைக்கு வந்து அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவர முடியும்
‘சேனல் 4 இந்த வீடியோவை பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்துதான் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் பொறுமையோடு இருந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இன்னும் ஒரு வீடியோவோ நிழற்படமோ வெளியாகலாம். அது தான் சனல் 4வின் பழக்கம் என்று எல்லோருக்கும் தெரியும்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச்செல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தார்கள். இன்று அவர்கள் அந்தப் பணத்தை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக செலவிடுகிறார்கள். தமிழ் பிரிவினைவாதிகளின் பணத்தின் பிடியில் சனல் 4வும் சிக்கியிருக்கிறது’ என்றார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் இதற்கு முன்னர் சுமத்தியிருந்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply