காமன்வெல்த் மாநாடு: தமிழர்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் முடிவு எடுப்பார் – ஜெயந்தி நடராஜன்

மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–கேள்வி:– பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் ரூ.650 கோடி செலவாகி உள்ளது. இது வீணாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:– வெளிநாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்குத்தான் பிரதமர் மன்மோகன்சிங் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தான் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த முடியும்.

இதனால் தொழில்கள் வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அன்னிய செலாவணியை உயர்த்த வெளி நாட்டு சுற்றுப்பயணம் அவசியமாகிறது. இது மக்களின் நலன் கருதி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிற பயணம். இதை வீணான செலவு என்று கூறுவது தவறு.

கேள்வி:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?

பதில்:– காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்.

கேள்வி:– இசைப்பிரியா கொல்லப்பட்ட ஆவணப் படம் பார்த்தீர்களா?

பதில்:– ஆவண படத்தை ஊடகங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்து கொண்டேன். அந்த காட்சிகளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கேள்வி:– தண்டையார் பேட்டையில் எண்ணை கசிவு மூலம் நிலத்தடி நீர் மாசுபட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன?

பதில்:– சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அந்த வழியாக குழாய்களை கொண்டு போக கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இப்போது அந்த பகுதி வழியாக எண்ணை கொண்டு செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த கூட்டத்தில் எண்ணை நிறுவன அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதில் சில முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply