யுத்தக்குற்றங்களுக்கு இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும் : விக்கிரமபாகு
இசைப்பிரியா கொலை தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே இராணுவ அறிக்கையை ஆதாரம் காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்கள் நடந்தமைக்கு இந்தியாவும் பொறுப்பாகும். பல்லாயிரக்கணக்கிலான தமிழர்களை கொன்றதில் இந்தியாவிற்கும் தண்டனை கொடுத்தாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கண்மூடித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது. இசைப்பிரியா மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் அக்கறை இலங்கை அரசாங்கத்திற்கில்லை என்பதே உண்மை. அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தாதுள்ளது. மக்களின் நலன்களை பற்றியோ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலோ அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால் இன்று வடக்கு மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைத்திருக்கும்.
யுத்த குற்றங்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் வெளியிடும் அறிக்கைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு அரசாங்கம் ஒரு பக்க அறிக்கையினை மட்டும் வெளியிடுவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் விடுதலைப் புலிகளுக்காகவோ பிரபாகரனுக்காகவோ குரல் கொடுக்கவில்லை. நாம் தமிழர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் மட்டுமே குரல் கொடுக்கின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் இந்தியாவும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். சோனியாகாந்தி யுத்த கால கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை தூண்டி விட்டவர். இன்று அவர்கள் வாய் மூடி செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் செய்த குற்றங்கள் சரியென்றாகி விடாது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதைப் போல் இந்தியா செய்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கும் வடக்கை மயானமாக மாற்றியமைக்கும் முதலில் இந்தியாவிற்கே தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply