பொதுநலவாயம்: இரண்டாண்டுகளுக்குள் யதார்த்தபூர்வமான மாற்றங்கள் :ஜீ.எல்.பீரிஸ்

பொதுநலவாய நாடுகள் தங்கள் அமைப்பை தற்போதைய தேவைகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் அதி உன்னத அமைப்பாக மாற்றி, அங்கத்துவ நாடுகளின் பிரஜைகளுக்கு நடைமுறையில் பயன்தரக்கூடிய வகையில் செயற்படுவது அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட் டுக்கு சமமாக நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக் கிடையிலான அகில இலங்கை கட்டுரை, சித்திரம் மற்றும் விவாதப் போட்டிகளில் வெற்றியீட்டி யோருக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவும் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் காலப்பகுதியில் இலங்கை அவ்வமைப்பில் இவ்விதம் அத்தியாவசி யமான மாற்றங்களை ஏற்படுத்தி, அதனை நவீனமயப்படுத்துவதற்கும் உத்தேசித்திருப்பதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் பெருமையாக கருதுகிறோம். இதன் மூலம் எங்கள் நாட்டின் கெளரவம் உயர்ந்துவிடுவதுடன் எமக்கு இதனால் பலதரப்பட்ட நன்மைகளும் ஏற்படும் என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், 1972ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வு இதுவென்றும் 24 வருட இடைவெளிக்குப் பின்னர் ஒரு ஆசிய நாடு இப்போதுதான் முதல்தடவையாக இம்மாநாட்டை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது என்றும் சொன்னார்.

ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நாம் இந்நாட்டு மக்கள் அனைவரது பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டே இந்த சர்வதேச நிகழ்வுக்கு தயாராகினோம் என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், நம்நாட்டு மக்கள் தாங்களும் சர்வதேச நிகழ்வின் பங்காளிகள் என்பதை உணர வைப்பதே அரசாங்கத்தின் விருப்பம் என்றும் கூறினார்.

பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரை, சித்திரம் மற்றும் பேச்சுப் போட்டிகள் மிகவும் உயர்தரமான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்த அவர், இந்தப் போட்டிகளின் மூலம் நம்நாட்டுப் பிள்ளைகள் பொதுநலவாய நாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொள்வதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தப் போட்டிகளை பொதுநலவாய சமூக நிகழ்வுகளுக்கான உபகுழு வெளிவிவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் ஒழுங்கு செய்திருந்தது.

இந்தப் போட்டிகளை பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி மற்றும் சமூக நீதி என்ற தொனிப்பொருளில் நடத்தினார்கள். கட்டுரை மற்றும் விவாதப் போட்டிகள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் மூன்று தரங்களில் நடத்தப்பட்டன.

6,7 மற்றும் 8ம் தரங்களுக்கிடையில் முதலாவது குழுவும் 9,10,11ம் தரங்களுக்கிடையில் இரண்டாவது குழுவும் 12,13 ம் தரங்கள் மூன்றாவது குழுக்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. விவாதப் போட்டிகள் 12,13 தரங்களுக்கிடையில் மாத்திரமே நடைபெற்றன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் உரையாற்றினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply