அரசாங்கத்தின் நடவடிக்கைகளே வடக்கில் பிரிவினைவாதம் உருவாகக் காரணமாகும் : ஜே.வி.பி.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளே வடக்கில் பிரிவினைவாதம் உருவாகக் காரணம் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. வட மாகாணத்தில் தொடர்ந்தும் பிரிவினைவாதம் நீடிப்பதற்கு அரசாங்கமே பொறுப்பு என சுனில் ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.வடக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மக்களுடன் இணைந்து அவர்களது சிரமங்களை புரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்று வந்ததாகவும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மக்கள் கொலை செய்யப்படுவதாகவும், காணாமல் போவதாகவும், கடத்தப்படுவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய முறையில் விசாரணை நடாத்தத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாரியளவில் வடக்கில் இராணுவத்தினர் பிரசன்னமாகியுள்ள நிலையில் இவ்வாறான குற்றச் செயல்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது கேள்விக்குரியே என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் திறமைகள் குறித்து மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அவர்களினால் எந்த சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளினால் வடக்கின் ஜனநாயகம் சீர்குலைந்துள்ளதாக சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply