சிரியாவில் போர் விமானங்கள் பீப்பாய் குண்டுகளை வீசி தாக்குதல்: 28 குழந்தைகள் உள்பட 76 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.
ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
சுமார் 10 லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், போராளிகளின் பிடியில் உள்ள சிரியாவின் வர்த்தக நகரான அலெப்போ நகரத்தை குறிவைத்து கடந்த சனிக்கிழமை அரசின் விமானப்படை கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. பீப்பாயில் நிரப்பப்பட்ட குண்டுகளை கொண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இது தவிர, போராளிகளின் பிடியில் உள்ள சக்கூர், அர்ட்-அல்-ஹம்ரா உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் இதே போன்ற பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டன.
ஒரு பீப்பாயில் நூறு கிலோவிற்கு மேலான வெடிப்பொருட்கள் வீதம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஏராளமான பீப்பாய் குண்டுகள் அங்கு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின. வீதிகளில் நின்றிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
16 சிறுவர்கள் உள்பட 37 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். 28 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 76 பேர் இந்த பீப்பாய் குண்டு தாக்குதலில் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply