ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் இலங்கை – இந்திய மீனவர் பேச்சு

சென்னையில் ஜனவரி (27)நடைபெறும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையேற்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு முன்பாக சுமுக சூழலை ஏற்படுத்த இரு நாடுகளின் சிறைகளிலும் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இரு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து தமிழகச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இலங்கைச் சிறைகளில் இருந்தும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை, 317 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகச் சிறைகளில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாளை திங்கள்கிழமை தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜன.27) காலை 10 மணிக்கு நடைபெறும். இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்கு நீரினை பகுதியில் செயற்கையாக எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லையில் பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்படும்.

முந்தைய இந்திய-இலங்கை பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்டபடி இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் நீண்டகால சிறைவாசம், இலங்கை அதிகாரிகளால் மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்தல் மற்றும் முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களை அவர்களது படகுகளுடன் விரைவாகவும், சுமுகமாகவும் நாடு திரும்புவதற்கான வழி வகைகள் குறித்து விவாதிக்க வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகளை தெரிவிக்க வேண்டும்.

முக்கிய தகவல்களான ஆபத்துக்கால நிகழ்வுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த மீன்பிடி முறைகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை இருதரப்பினரும் பரிமாறிக் கொள்வதன் மூலம் பாக்கு நீரினை பகுதியில் மீன் மற்றும் மீன்வளங்களை நீண்ட கால வாழ்வாதாரத்துக்கு உகந்த வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற்கொள்ளும் வகையிலான சாத்தியக் கூறுகளை கண்டறிய வேண்டும்.

இந்த ஐந்து அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply