அரசுக்கு எதிராக கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் ஐ.தே.க., ஜே.வி.பி, கூட்டமைப்பு, ஜ.க. பங்கேற்பு
ஊழல் மோசடிமிக்க ஆட்சிக்கு எதிராக ஐ.தே.க, ஜே.வி.பி, ஜனநாயக கட்சி மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மருதானை, கொம்பனிதெரு, லிப்டன் சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்றுகூடவுள்ளது என எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழி ற்றுறை சார்ந்த தொழிற்சங்கங்களும் ஊடகவியலாளர் சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொள்ளவுள்ளார்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தையடுத்து பொதுக்கூட்டம் 2மணி க்கு ஹைட்பார்க்கில் நடைபெறவுள்ளது என்றும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசிய ஊழியர் சங்க காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே எதிர்க்கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளரான கருணாசேன கொடித்துவக்கு இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் என்றுமில்லாத வகையில் அநாச்சாரம் அதிகரித்துள்ளது. கசினோ சூதாட்டத்தை இலங்கையில் கொண்டு வந்து நாட்டின் கலாசாரத்தை இவ்வரசாங்கம் சீரழித்துள்ளமை மறைக்கக்கூடிய விடயமல்ல. எனவே இவ்வரசின் மோசடிமிக்க செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் தற்போது மக்களுடைய பணம் வீண் விரயம் செய்யப்படுகின்றது. மக்களுக்கு எவ்விதப் பிரயோசனமும் அற்ற வகையில் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்தல விமான நிலையம், அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக் ஷ துறைமுகங்களினால் மக்கள் எவ்வித நன்மைகளையும் பெற்றுக்கொள்ளவில்லை.
அது மாத்திரமின்றி மக்களுடைய பணம் கார் ரேஸிற்கு செலவிடப்படுகிறது. இதற்கு அப்பால் அரசாங்கத்தினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினதும் செயற்பாடுகள் சர்வாதிகார ஆட்சிகளின் பண்புகளைக் கொண்டவையாக காணப்படகின்றன. தற்போது ராஜபக் ஷ குடும்பத்தினர் வைத்ததுதான் சட்டமாக காணப்படுகின்றது. அதேபோன்று எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் அமைச்சர்களின் தொகை அதிகமாக காணப்படுகின்றது. தற்போது ஹெரோயின் கொள்வனவில் அதிகமாக அமைச்சர்களே சம்பந்தப்பட்டுள்ளமை இவ்வரசு ஊழல் மோசடிமிக்கது என்பதை உறுதிபடுத்துகிறது.
எனவே இதனடிப்படையிலேயே ஜனவரி 28 ஆம் திகதியான நாளை செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, நவசமசமாஜக்கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஏனைய முக்கிய சில அரசியல் கட்சிகளும் அனைத்து தொழிற்றுறை சார்ந்த தொழிற்சங்கங்களும் ஊடகவியலாளரின் சங்கங்கள் உட்பட பெரும்பாலான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்வார்ப்பாட்டம் மருதானை, கொம்பனிதெரு மற்றும் லிப்டன் சுற்றுவட்டங்களினூடாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு ஹைட்பார்க்கில் ஒன்று கூடவுள்ளனர். பின்பு 2 மணியளவில் அரசிற்கு எதிரான பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின்படி தொழிற்சங்கங்கள் மருதானையிலிருந்தும் ஊடகவியலாளர்கள் அமைப்புகள் லிப்டன் சுற்று வட்டத்திலிருந்தும் அரசியல் கட்சிகள் கொம்பனித் தெருவிலிருந்தும் தனது எதிர்ப்பு ஊர்வலத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விக்கிரமபாகு கருணாரட்ண
இதன்போது கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண உரையாற்றுகையில்,
தற்போது நாட்டின் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளக் கொடுப்பனவுகளை இதுவரை அரசு வழங்கவில்லை. இதனால் அரச ஊழியர்கள் தனது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது நாட்டில் அநாச்சாரம் அதிகரித்துள்ளதுடன் இந்நிலையிலேயே நாங்கள் இவ்வார்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோம். இருப்பினும் இதற்கு இடையூறு விளைவிப்பதற்கு அரசு பொலிஸ் அதிகாரத்தை பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
எனவே, இவ்வரசின் ஊழல் மோசடிமிக்க ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முன்வர வேண்டுமென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply