போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி போராளித்தலைவர்களை விசாரிக்க எண்ணும் தெற்கு சூடான் அரசு
தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர்ருக்கு எதிராக அவரது முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி துவங்கப்பட்ட அரசியல் எதிர்ப்புக் கலவரம் நாளடைவில் இனப் படுகொலையாக மாறியது. பிற ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா அமைப்பும் மேற்கொண்ட முயற்சியினைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதில் சூடான் அரசால் காவலில் வைக்கப்பட்டுள்ள 11 புரட்சியாளர் தலைவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதுவும் எதிர்த்தரப்பினரின் ஒரு கோரிக்கையாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொடர்ந்து வரும் கலவரங்கள் மோசமான மனிதாபிமான நெருக்கடியையே உணர்த்துவதாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் ஏழு போராளிகளை இன்று விடுவித்துள்ள தெற்கு சூடான் அரசு மற்ற நான்கு போரையும் நிறுத்தி வைத்துள்ளது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது விசாரணை நடத்தும் எண்ணத்தில் அரசு உள்ளது. இவர்கள் தவிர ரீக் மச்சர் உட்பட இன்னும் மூன்று தலைவர்கள் பிடிபடும்போது அவர்கள் மீதும் நீதி விசாரணை நடத்தப்படும் என்று தெற்கு சூடானின் நீதித்துறை அமைச்சர் பவ்லினா வனவிலா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.
புரட்சியாளர்கள் குறிப்பிட்டபடி மீதியுள்ள நான்கு தலைவர்களின் விடுதலைக்கு சூடான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கென்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசியல் நல்லிணக்கம் அதிகரிக்கும் வகையில் மற்றவர்களையும் விடுதலை செய்யுமாறு அமெரிக்கா தெற்கு சூடான் அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியல் மோதலிலிருந்து இனக்கலவரமாக மாறிய இந்த போராட்டங்கள் அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவே பலரும் அஞ்சுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தும், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியும் உள்ள நிலையில் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டிலுள்ள ஐ.நா முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
அரசாங்கமும், எதிர்த்தரப்பும் முக்கிய பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் போராடி வருகின்றனர். எனவே பலவீனமான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று பிற நாட்டுத் தலைவர்கள் கருதுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply