ஜெனிவா தீர்மானம் இலங்கையில் செல்லுபடியாகாது: ஹெல உறுமய

இலங்கைக்கு எதிரான சர்வதேசத் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஜெனிவா தீர்மானம் இலங்கையில் செல்லுபடியாகாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. மக்களின் ஆதரவே அரசாங்கத்தின் வெற்றிக்கு வித்திட்டது. சர்வதேசம் ஒன்று திரண்டாலும் மக்கள் எம்முடனே இருக்கின்றனர் என்பது இம்முறை தேர்தலில் உறுதியாகியுள்ளது எனவும் ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி பற்றியும் வினவிய போது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கைக்கு எதிராக அமெரிக்கப் பிரேரணை கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றாலும் பிரேரணையினை ஒருபோதும் இலங்கையில் செயற்படுத்த விடமாட்டோம். அரசாங்கத்தை மீறி எவராலும் இலங்கையை கட்டுப்படுத்த முடியாது. சர்வதேச நாடுகள் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகளை தீர்மானிக்க நாடு ஒன்று அடிமையில்லை. ஜெனிவா தீர்மானங்களை இலங்கையில் செயற்படுத்தி பிரிவினையினை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரிவினைவாதிகளுக்கு தக்க படிப்பினையினை நாம் கற்பிப்போம்.

அதேபோல் மீண்டுமொரு ஆயுத யுத்தத்தினை உருவாக்கும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது புலம்பெயர் பிரிவினைவாதிகளோ முயற்சிப்பார்களாயின் அந்த துரோகச் செயலை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் இம்முறை மேல் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற்றதன் மூலம் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது வெளிப்பட்டு விட்டது. சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டாலும் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சதிவேலைத் திட்டம் செய்தாலும் நாட்டு மக்கள் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர் என்பது வெளிப்பட்டு விட்டது. கடந்த முறைத் தேர்தலை விடவும் இம்முறை அரசாங்கத்தின் வாக்குகள் சற்று குறைவடைந்திருந்தாலும் அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்தாலும் மக்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள். கடந்த காலங்களிலும் இவ்வாறே இடம்பெற்றது. யுத்த வெற்றியோ ஜெனிவா பிரேரணையோ இம்முறைத் தேர்தலை தீர்மானிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையும் மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் இருப்பதுமே எமது வெற்றிக்கு வித்திட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply