அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தாய்லாந்து பிரதமர் மீது வழக்கு
தாய்லாந்து நாட்டில் பெண் பிரதமர் யிங் லக் ஷினவத்ரா தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே இந்த அரசுக்கு உண்டு. இந்த நிலையிலும், இவர் ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட தனது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் பினாமியாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதன் காரணமாக யிங் லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் யிங் லக் ஷினவத்ரா, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக தாய்லாந்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் தனது புவா தாய் கட்சி பலன் அடையத்தக்க விதத்தில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயை 2011-ம் ஆண்டு இட மாற்றம் செய்ததாக யிங் லக் ஷினவத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாவில் பிளையன்ஸ்ரீ கடந்த மார்ச் மாதம் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுவிட்டார். இருப்பினும் அவரை பதவியை விட்டு நீக்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி, யிங் லக் ஷினவத்ரா மீது 27 எம்.பி.க்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். வழக்கு, தாய்லாந்து அரசியல் சாசன கோர்ட்டால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
இந்த வழக்கில் பிரதமர் யிங் லக் ஷினவத்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டால், அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவரது அரசுமே பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என சில அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் யிங் லக் ஷினவத்ராவுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அடுத்த மாதம் 2-ந் தேதி வரை அவகாசம் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தத் தகவலை அரசியல் சாசன கோர்ட்டின் செய்தி தொடர்பாளர் சாம்ரிட் சாய்வாங் தெரிவித்தார்.
பிரதமர் தனது தரப்பு விளக்கத்தை அடுத்த மாதம் 2-ந் தேதி அளித்தபின்னர், 6-ந் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கும். அதன்பின்னர் இந்த வழக்கில் எந்த நேரத்திலும் தீர்ப்பு வரக்கூடும் என தாய்லாந்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் பதவி விலகுமாறு தீர்ப்பு வந்து விட்டால், தாய்லாந்தில் பிரதமர் ஆதரவாளர்களுக்கும், அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல்கள் மேலும் வலுக்கும். மோதல்கள் வலுக்கிறபோது, அங்கு ராணுவம் தலையிட்டு ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply