தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும்,புதுச்சேரியின் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது ஒன்பது கட்டமாக நடந்து வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆறாவது கட்டமாக இன்று தமிழ்நாட்டைத்தவிர, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீஹார், இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

மும்பை மாநகரிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5.51 கோடி வாக்காளர்களும், புதுச்சேரியில் கிட்டத்தட்ட 9.35 லட்ச வாக்காளர்களும் இந்த தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய தமிழகம் மற்றும் புதுச்சேரி எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 845 வேட்பாளர்களும், புதுச்சேரியில் உள்ள் ஒரு மக்களவைத் தொகுதியில் 30 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள் மொத்த 39 மக்களவைத் தொகுதிகளிலும் 55 பெண் வேட்பாளர்களும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் 3 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தின் மதுரை தொகுதியில் திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் 517 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். புதுவையில் 19 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்

தமிழகத்தில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் போட்டியிடுவது தென் சென்னை மக்களவைத் தொகுதியில். குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்கள் போட்டியிடுவது நாகப்பட்டினம் தொகுதியில்.

இந்த தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் களத்தில் இறங்கியுள்ளது. பா.ஜ.க., தேமுதிக, ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட 7 கட்சிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் முதன் முறையாக தனித்துப் போட்டியிடுகிறது. இடதுசாரிக் கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 60,817 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 17 ஆயிரம் வாக்குச் சாவடிகள் காலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை வெப்-காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பணியில் கிட்டத்தட்ட 2.96 லட்சம் அதிகாரிகளும், அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 64,190 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,14,748 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மாலை ஆறு மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் வாக்குப் பதிவு முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்பாக வரும் வாக்காளர்களுக்கு வரிசையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, அந்த வரிசையில் உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்யும் வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 12 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 மக்களவை தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், அஸ்ஸாம் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகைளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும், மகராஷ்டிராவில் 19 தொகுதிகளிலும் என்று இந்த ஆறு மாநிலங்களிலும் மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிஹார் மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், காஷ்மீர் மாநிலத்தில் 1 தொகுதியிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றுவருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply