மாகாணசபை முறைமையினை வலுப்படுத்துவது அவசியம்: சி.வி. விக்கினேஸ்வரன்
ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்த இடமளிக்க முடியாது. அந்த அதிகாரங்களின் ஊடாக குறித்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகளை வகுத்து நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவது மாகாணசபைகளையே சாரும் என்று வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாணசபைகளுக்கென சில விடயங்களும் மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும் இரண்டிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினாலேயே ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.ஆனால் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்த இடமளிக்க முடியாது.
வடக்கு, கிழக்கு மக்களின் விடிவுக்காகத் தான் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்போய் எமக்கு தந்துவப்போன சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல்போயுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, மற்றும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போதே முதலமைச்சர் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் இடம் பெற்று ஆறுமாதங்கள் ஆகிவிட்டன. யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் இதுவரை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை. தற்போதே முதற்றடவையாக அவர் இணைத்தலைமையை ஏற்று கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் அந்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் இணைத் தலைவராக பங்கேற்க விக்கினேஸ்வரன் ஆறுமாதகாலங்களின் பின்னர் தாம் ஏன் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பங்கேற்கின்றோம் என்ற விளக்கத்தை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டமும் நடைபெற்றது.
வடமாகாணசபைத் தேர்தல் இடம் பெற்றுவதற்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம் பெற்று வந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் பங்கேற்காத நிலையே காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்பதுடன் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் சகல மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று கூடி அந்த மாவட்ட மக்களின் தேவைகள் குறித்தும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து ஏகமனதாக முடிவு எடுத்து கருமங்களை செயற்படுத்துவது சிறந்த விடயமாகும்.
கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்கள் சகல மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இடம் பெற்றிருக்கின்றது. யாழ். மாவட்டத்தின் ஐக்கியதேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் இக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவ்வாறு இடம் பெறும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் சகல கட்சியினரும் சுயநல அரசியல் நலன்களை கைவிட்டு பொதுமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும். இதன் மூலம் தான் மாவட்டங்களின் அபிவிருத்திகளை உரிய வகையில் முன்னெடுக்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு திகழ்கின்றது. கடந்த மாகாணசபை தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தல்களிலும், இந்த ஆதரவை தமிழ் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கூட்டமைப்பின் எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கிழக்கிலும், மட்டக்களப்பு, மாவட்டத்தில் அபிவிருத்திக்குழுக்கூட்டங்கள், மற்றும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றிவருகின்றனர். இதற்கான உரிய அழைப்புக்கள் விடுக்கப்படுவதாகவே தெரிகின்றது. இவ்வாறு மாவட்டங்களின் அபிவிருத்திகள் தொடர்பான எத்தகைய கூட்டங்களுக்கும் மக்களின் பிரதிநிதிகள் சகலரும் அழைக்கப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் கலந்துகொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இந்தக்கூட்டங்களின் மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்த முயலக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார். உண்மையிலேயே வடமாகாணசபைத்தேர்தலில் மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தன்வசப்படுத்தியுள்ளபோதிலும் உரிய வகையில் நிர்வாகத்தை கொண்டுநடத்த முடியாத நிலை நிலவிவருகின்றது.
மாகாணசபைகளுக்கென அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட வழங்குவதற்கு அரசாங்கம் பின்னிற்கின்றது. வழங்கப்பட்ட ஒரு சில அதிகாரங்களையும் தட்டிப்பறிக்கும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இந்த நிலைமை தொடரக்கூடாது என்ற வகையிலேயே முதலமைச்சரின் கருத்து அமைந்துள்ளது.
வடமாகாணசபை விடயத்தில் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு செயற்படுவதற்கு முதல்வர் விக்கினேஸ்வரன் முன் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், தனது அமைச்சுப் பொறுப்புக்களைக்கூட ஜனாதிபதி முன்னிலையிலேயே ஏற்றுக்கொண்டார். இவ்வாறு நல்லெண்ணத்தைக் காட்டிய போதிலும், அரசாங்கம் உரிய வகையில் செயற்படாமையினால் கடந்த ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பின் போது பல உறுதிப்பாடுகளை ஜனாதிபதி வழங்கியிருந்தபோதிலும், அவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான குறைந்தபட்ச அதிகாரங்களையாவது மாகாணசபைகளுக்கு வழங்கி அந்த சபைகளின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதனை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபையின் உறுப்பினருமான மனோகணேசனும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
6ஆவது மேல்மாகாண சபையின் முதலாவது அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த மனோகணேசன் வடமாகாண முதலமைச்சருக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை மேல்மாகாணசபை முதலில் அனுப்பவேண்டும். தேசிய இனப்பிரச்சினைத் தீர்வின் முதல் புள்ளியாக மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கைத் தரும் செய்தியை நாம் வடமாகாணசபைக்கு அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார். உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு அடிப்படைத்தீர்வாக அமையும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்த தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஆனால் அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply