நல்லிணக்கத்துக்கு எதிரான முயற்சிகளை நிராகரிப்பது ஊடகங்களின் சமூகப் பொறுப்பு : ஜனாதிபதி
பல நூற்றாண்டுகளாக எவ்வித தீங்கும் இழைக்காத வகையில் பேணிப் பாதுகாக்கப்பட்ட ஊடகங்களின் நன்னெறியை பாதுகாப்பது ஊடகங்களின் ஒரு சமூகப் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் ஆண்டுக்கான நிறைவேற்று உத்தியோகத்தரை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். ஊடகங்கள் தேசிய அபிவிருத்திப் பணிகளிலும் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கு நன்மை அளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் விஞ்ஞான, கல்வி, கலாசார முன்னெடுப்புகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறதென்று கூறினார்.
இலங்கையின் வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வென்றெடுத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்தும் பணியில் இன்று நாம் ஈடுபட்டு வருகிறோம். புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கப்பாட்டின் மூலம் சமாதானத்தை வலுப்படுத்துவதற்கு நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உள்ளூரிலும், வெளிநாட்டிலும் நல்லிணக்கப்பாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளை நிராகரிப்பது அவசியம். நாட்டில் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவினால் அது தேசிய அபிவிருத்திக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
1997ம் ஆண்டில் தான் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக இருந்த போது மகாராஜா நிறுவனத்தின் இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஆண்டுக்கான சிறந்த நிறைவேற்று உத்தியோகத்தராக நிமல் லக்ஷபத்தியாராய்ச்சி தெரிவு செய்யப்பட்டதை ஜனாதிபதி ஞாபகப்படுத்தினார்.
இன்றைய சமாதானத்தின் மூலம் தோன்றியிருக்கும் புதிய யுகத்தில் தனியார் முதலீட்டு முயற்சிகளும் வர்த்தக சமூகமும் நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு உறுதுணை புரியவிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் தோன்றியி ருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாம் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நாட்டை எவ்விதம் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதை பார்க்க வேண்டும். 2050ம் ஆண்டில் இலங்கையை பலம்பொருந்திய ஜனநாயக நாடாக மாற்ற வேண்டுமென்பதுடன் பொருளாதாரத் துறையிலும் நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும். அதனால் தான் எமது அரசாங்கம் 2020, 2030, 2050ம் ஆண்டுகளை இலக்கு வைத்து வேகமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிற தென்றும் ஜனாதிபதி கூறினார்.
அரசாங்கம் ஏற்கனவே 751 நெனசல அல்லது அறிவு நிலையங்களை ஏற்படுத்தி கிராமிய மக்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. சூரியவெவயில் உள்ள நெனசல நிலையத்தின் இளம் பெண் முகாமையாளர் ஸ்பெயின் தேசத்தில் நடைபெற்ற உலகின் டெலி சென்டர் ஒப்பரேட்டர் விருதை வென்றிருப்பது எங்கள் நாட்டுக்கு பெருமையை அளிக்கிறது என்றும் கூறினார்.நாம் இப்போது மஹிந்தோதய வித்தியாலயங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
விரைவில் 1000 ஆவது மஹிந்தோதய வித்தியாலயம் திறக்கப்படும். பாடசாலைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம், கணிதம், மொழிகள் ஆகியன நம்நாட்டுப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, இவற்றுக்கு இளைஞர்களின் புத்தமைவு செயற்பாடுகள் ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply