5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: ராமேசுவரம் மீனவர்கள் முதலமைச்சரை சந்திக்க சென்னை வருகை
5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், அவர்களை விடுதலை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியும் மீனவர்களின் குடும்பத்தினர், நாளை முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். ராமேசுவரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கடந்த 2011–ம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு மீனவர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போராட்டங்களும் வெடித்தன. பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு, ரெயில் தண்டவாளம் சேதம் என பல சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களை அன்வர்ராஜா எம்.பி. சந்தித்து பேசியதன் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
இருப்பினும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்தனர். மேலும் தங்கச்சிமடத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ சங்க பிரதிநிதிகள், வக்கீல்கள், பொது நல அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக 5 மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும் அவர்களை விடுதலை செய்து தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க கேட்டு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்வர்ராஜா எம்.பி., தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று சென்னை செல்வது என முடிவு செய்துள்ளனர்.
மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசை வலியுறுத்தி முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுப்பது, தேவைப்பட்டால் அங்கிருந்து டெல்லி செல்வது என்றும் மீனவ பிரதிநிதிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply