இந்திய மீனவர்கள் யாழ் சிறையில் உண்ணாவிரதம்
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 38 மீனவர்களே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் இவர்களை புதனன்று இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுடைய விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரியிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கை ஏற்க இந்திய மீனவர்கள் மறுத்துவிட்டாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுடைய குடும்பங்களைத் தாங்களே பார்க்க வேண்டியிருப்பதனாலும், தாங்கள் இல்லாமல் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் இல்லையென்றும் எனவே, தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
இந்த மீனவர்களின் போராட்டம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் வழங்கியுள்ளதையடுத்து, இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன், இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எல்லை தாண்டிச் சென்று இந்தியக் கடற்பரப்பில் மீன்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற 100 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்ப்டிருப்பதாகவும், அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் இரு நாட்டு அரச மட்டங்களில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நீர்கொழும்பில் இருந்து செயற்படுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு பிரதேசங்களுக்கான இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பலப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் விடுதலை செய்திருக்கின்ற போதிலும், இந்தியச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் குறித்து எதுவித கவனமும் செலுத்தப்படாதிருப்பது கவலைக்குரியது என்றும் ஜேசுதாசன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply