பாகிஸ்தானில் 55 ஆண்டுகளுக்கு பிறகு முதிய தம்பதியரை 4 குழந்தைகளுடன் கொன்ற மகன்

பாகிஸ்தானில் 55 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருணம் செய்த முதிய தம்பதியரை 4 குழந்தைகளுடன் ஒரு கும்பல் கொடூரமான முறையில் கோடரிகளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர், குலாம் பாத்திமா. கணவரை இழந்து, விதவையாக வாழ்ந்த இவர் 55 ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தாரின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஃபசல் ரசாக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தங்களை புறக்கணிக்கும் உறவினர்களுக்கு மத்தியில் வாழ விரும்பாத குலாம் பாத்திமா தனது கணவருடன் இதே மாவட்டத்தின் அத்தாரா ஹஸாரி தாலுகாவில் உள்ள மல்கானா மோர் பகுதியில் வசித்து வந்தார். ஃபசல் ரசாக்குடனான சுமார் 55 ஆண்டுகால தாம்பத்தியத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த குலாம் பாத்திமாவை அவரது கணவர் எவ்வித குறையும் இன்றி நன்றாக கவனித்து வந்துள்ளார்.

இன்பமயமாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென்று மகன் ரூபத்தில் எமன் வந்து குறுக்கிட்டான். சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கணவர் மூலம் குலாம் பாத்திமாவுக்கு பிறந்த மகன், சில நாட்களுக்கு முன்னர் ‘தாங்க முடியாத தாய்ப்பாசத்துடன்’ அவரை தேடி வந்தான்.

அவரது வீட்டில் தங்கி இருந்த அவன், கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தயாரிக்கப்பட்டிருந்த உணவில் மயக்க மருந்தை கலந்தான்.

அந்த உணவை சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்த பின்னர், நேற்று அதிகாலை தனது கூட்டாளிகள் ஐந்து பேருடன் அந்த வீட்டுக்குள் நுழைந்த அவன், தாயார் குலாம் பாத்திமா, அவரது கணவர், 23 முதல் 5 வயதுக்குட்பட்ட அவர்களது 3 மகள்கள் மற்றும் 11 வயது மகன் என மொத்தம் 6 பேரையும் கூட்டாளிகளின் துணையுடன் கோடாரிகளால் வெட்டிக் கூறு போட்டான்.

வீட்டில் மயங்கிக் கிடந்த மேலும் 5 குழந்தைகளும் இந்த கோரத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. குற்றுயிரும், குறையுயிருமாக இருக்கும் அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாத்தாவின் குடும்ப கவுரவத்தை குலைத்த குற்றத்துக்காக பெற்ற தாய் என்றும் பாராமால் அவரையும், அவருடன் மேலும் ஐந்து உயிர்களையும் ‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் பறித்துவிட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளியையும் அவனது கூட்டாளிகளையும் ஜாங் மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply