சிட்னி ஓட்டலில் பிணைக்கைதியாக இருந்த இந்தியர் மீட்பு: துப்பாக்கி சண்டையில் 2 பேர் சாவு

ஆஸ்திரேலியாவில் ஓட்டலில் புகுந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி இந்தியர் உள்ளிட்ட பலரை மீட்டனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்தியில் உள்ள மாட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் புகுந்த ஒரு தீவிரவாதி, துப்பாக்கி முனையில் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.இதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இந்தியரும் பிணைக்கைதியாக சிக்கியுள்ளதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள நபர், ஈரானைச் சேர்ந்த ஹரோன் மோனிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து அதிரடிப்படையினர் உள்ளே சென்று தாக்குதல் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பும் சில ஆலோசனைகளை வழங்கியது.

முதலில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் ரோபோவை உள்ளே அனுப்பினர். பின்னர், ஓட்டலுக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியபடி, தீவிரவாதி இருக்கும் அறையை நோக்கி முன்னேறினர். அதேசமயம், மருத்துவக் குழுவினரும் ஸ்டிரெச்சருடன் உள்ளே சென்றனர்.

துப்பாக்கி தாக்குதல் ஒருபுறம் நடக்க, ஓட்டலுக்குள் சென்ற போலீசாரின் உதவியுடன் பிணைக் கைதிகள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டனர். இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்திய நேரப்படி இரவு 8.50 மணியளவில் ஆரம்பித்த இந்த தாக்குதல் 9.20க்கு நிறைவடைந்தது. அப்போது, 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில், தீவிரவாதி ஹரோன் மோனிசும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply