நாடு கடந்த தமிழீழ அரசுடன் எதிரணியினர் இரகசியப் பேச்சு தேசத் துரோக செயற்பாடு : அமைச்சர் நிமல்
”எதிரணியினர் சிங்கப்பூர் சென்ற வேளை நாடு கடந்த தமிழீழத்தை சேர்ந்த 9 அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இந்த நாட்டிற்கு எதிராக செயற்படும் நோக்கில் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் நாட்டிற்கு விரைவில் உரிய தகவல்களை வெளியிடுவோம்” என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்தார்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக எதிரணியினர் வழங்கிய வாக்குறுதியானது மக்களை ஏமாற்றுவற்கான வித்தையாகும் என்றும் கொழும்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற போராட்டத்திற்காகவே மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாட்டாலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அனைவரும் மாதுலுவாவே சோபித தேரரின் கீழ் ஒன்று கூடினர்.
இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஜனாதிபதி முறைமையை நீக்க போவதில்லை. மாறாக அரசியலமைப்பின் 18வது திருத்த சட்டத்தையே நீக்குவோம் என்று கூறியுள்ளார்.
ஏமாற்றுக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கமைய சிலர் ஜனாதிபதி முறைமையை 24 மணித்தியாலத்தில் நீக்குவதாகவும் ஒரு சிலர் 100 நாட்களுக்குள் நீக்குவதாகவும் இன்னும் சிலர் 6 மாதங்களில் நீக்குவதாகவும் கூறுகின்றனர்.
இவையனைத்தும் போலியான வாக்குறுதி. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக போலியான முறையில் வடிவமைக்கப்பட்ட போராட்டமாகும். எனவே இவையனைத்தும் சர்வதேச சக்தியின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
எதிரணியின் சிங்கப்பூர் பயணம்
எதிரணியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீர ராஜித சேனாரத்ன மைத்திரிபால சிறிசேன சரத்பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கடந்த நவம்பர் மாதம் 2முதல் சிங்கப்பூரிற்கு விஜயம் செய்தனர்.
இதே காலப்பகுதியின் போது நாடு கடந்த தமிழீழத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நாட்டின் 9 அமைச்சர்களும் அதே காலப்பகுதியில் சிங்கப்பூரில் இருந்துள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வைத்து குறித்த இரு தரப்புக்களுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தினைச் சார்ந்த நாடு கடந்த தமிழீழத்தவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையையும் உடன்படிக்கை இருப்பின் அவற்றையும் எதிரணியின் தேசத்துரோக செயலை நாட்டு மக்களின் முன்னிலையில் வெளிப்படுத்துவோம். அதற்காக விசாரணையை செய்து வருகின்றோம்.
மைத்திரியின் குற்றச்சாட்டு
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மொரகஹகந்த செயற்றிட்டத்தினை நிறைவேற்ற உரிய வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகும். நீர்ப்பாசன வேலைத்திட்டத்திற்கு வருடா வருடம் உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் தனது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மைத்திரிபால சிறிசேன சுமத்துகின்றார். 2002ஆம் ஆண்டு ஆட்சியின் போது நீர்ப்பாசன திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டணியிலேயே தற்போது மைத்திரிபால சிறிசேனா இணைந்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
நீர்ப்பாசன திட்டத்தினை அமுல்படுத்தும் நோக்கில் மீள்குடியேற்றம் புதிய நகரம் அமைத்தல் உள்ளிட்ட காரண காரியங்களை நிலை நாட்டாமையினாலேயே ஜப்பானிடமிருந்து மொரகஹகந்த திட்டத்திற்கு ஜப்பான் அரசிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடன் எமது கையை விட்டு சென்றது. எனினும் ஜனாதிபதி தலையீட்டினாலேயே அது எமக்கு மீள கிடைக்க பெற்றது.
எனவே மக்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் துரோகம் செய்தவர்களின் போலியான வாக்குறுதி கடதாசி கிழித்தெறியப்பட்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply