பெஷாவர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் துவங்கின
பெஷாவரில் பள்ளிக்கூட தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலில் 132 குழந்தைகளும் 9 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் சவப்பெட்டிகளின் மீது மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் நடத்தியதிலேயே மிக மோசமான தாக்குதல் சம்பவமான இதில், துப்பாக்கிதாரிகள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவர்களைச் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்திருக்கிறார்.பயங்கரவாதக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு இருந்த தடையையும் அவர் நீக்கியுள்ளார்.
உலகத் தலைவர்கள் அனைவரும் இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஃப்கன் தாலிபான்கள்கூட இதனை விமர்சித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கைபர், வடக்கு வசிரிஸ்தான் பகுதிகளில் தீவிரவாத இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடச் சம்பவத்திற்குப் பதிலடியாக இந்தச் சம்பவம் நடந்ததா என்பது தெளிவாகவில்லை.
ஜூன் மாதத்திலிருந்தே தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுவருகிறது.
செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதலில் 7 தாலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடத்தின் பின்புறமிருந்த முட்கம்பி வேலிகளை வெட்டி உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், குழந்தைகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஆடிட்டோரியத்தை தாக்கினர்.
ஒவ்வொரு அறையாகச் சென்ற பயங்கரவாதிகள், கண்ணில்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுத்தள்ளினர்.
பெஷாவர் ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற இந்தப் பள்ளிக்கூடத்தை ராணுவம் நடத்திவருகிறது.
இதில் ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தவிர, வேறு குழந்தைகளும் படித்துவருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் 8 மணி நேரம் நீடித்தது. இந்தத் தாக்குதலில் 125 பேர் காயமடைந்தனர். 7 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது.
நேற்றே இறந்தவர்களைப் புதைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன.
இறந்தவர்களுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் ஆழ்ந்த வருத்தங்களை இந்தியப் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
“இன்று இந்தக் குழந்தைகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்ததிற்கும் பழிவாங்குவோம்” என நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் இருக்கும் பாகிஸ்தானியத் தூதரங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஆஃப்கன் தாலிபான்கள் வருத்தம்
ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக இம்மாதிரி ஒரு தாக்குதலை நடத்தும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தலிபானின் செய்தித் தொடர்பாளர் முகமது குரஸனி தெரிவித்துள்ளார்.
தலிபான் போராளிகளின் குழந்தைகளையும் பெண்களையும் ராணுவம் கொன்றதாகவும் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கைபர், வடக்கு வரிசிஸ்தான் பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தலிபான் வீரர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள், இந்த பள்ளிக்கூடத் தாக்குதல் இஸ்லாமுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தங்களது அஞ்சலிகளையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாக, ஆஃப்கன் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply