மாகாண சபை விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் காரணங்கள் நியாயமானது. எனினும் மாகாண சபை விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமை ப்புடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமது பக்க காரணங்களை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சபையின் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை சந்தித்து பேசியிருந்தோம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி நிலைமைகளிலும் மாறுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனை காலமும் ஆளும் தரப்பாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதிக்கம் தற்போது குறைவடைந்து வருகின்றது. அதேபோல் கிழக்கில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு தற்போது எமக்குக் கிடைத்துள்ளது.
குறிப்பாக 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் ஆட்சியமைக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது கிழக்கு மாகாண சபை முதலமைச்சு பதவவியினை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் இணக்கப்பாட்டிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவே இருந்தது. எனினும் எமது கோரிக்கையினை பொருட்படுத்தாது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு எமது கோரிக்கைகளையும் நிராகரித்திருந்தனர்.
இப்போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி மாற்றத்திற்கான இன்னுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆதிக்கத்தை எம்வசம் படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தோம்.
எனினும் இம்முறை எம்மிடையே சில நிலைப்பாடுகள் உள்ளது. நியாயமான வகையில் இம்முறை கிழக்கு மாகாண சபையினை அமைக்க கோரியே நாம் வேண்டுக்கோள் விடுக்கின்றோம்.
கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதிக்கம் தற்போது எம்மிடம் உள்ளது. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சு பதவியினையும் ஏற்கவில்லை. எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கத்தின் பிரதான அங்கம் வகிக்கும் கட்சியாகவும் அமைச்சு பதவிகளையும் ஏற்றுள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சு பதவியினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளோம்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கோரிக்கைகளை நியாயம் என ஏற்றுக் கொண்டுள்ளதுடன் எமது பக்க கருத்துக்களையும் புரிந்து கொண்டுள்ளார்.
எனினும் மாகாணசபை விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீட விரும்பவில்லை எனவும் மாகாண சபையின் கட்சிகளுக்கு இடையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான தீர்மானம் ஒன்றினை எடுக்க கோரியும் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத் தர கோரியும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் இரு தரப்பினரிடையேயும் சுமுகமான தீர்மானமொன்று எட்டப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி கிழக்கு மாகாணத்தின் கூடவுள்ள நிலையில் அன்றைய தினம் தீர்மானமொன்றிற்கு வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply