தேர்தலை தடுக்க இராணுவ யுக்திகளை பயன்படுத்திய தகவல்கள் எமக்கும் கிடைத்துள்ளது :சரத் பொன்சேகா

யுத்தத்தை காரணம் காட்டி இன்னமும் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது வடக்கில் இருந்து இராணுவத் தினரை குறைக்க வேண்டும் என தெரிவிக்கும் ஜனநாயகக்கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தேர்தலை தடுக்க இராணுவ யுக்திகளை பயன்படுத்திய தகவல்கள் எமக்கும் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார். தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிப்பதனுடாக வடக்கின் இராணுவக் குறைப்புக்களை மேற்கொண்டு பொது மக்களின் காணிகளை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தப்படுமா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச அளவில் இன்றும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இயங்கி கொண்டிருக்கின்றது. அதனுடன் தொடர்புபட்டு இலங்கையிலும் சிலர் செயற்படுகின்றனர் என்பதும் தெரியும். ஆனால் இலங்கையில் மிக சரியான அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமும் பாதுகாப்பு செயற்பாடுகளை சரியாக கையாள்வதன் மூலமும் விடுதலை புலிகளின் செயற்பாடுகளை தடுக்க முடியும். அதற்காக பொதுமக்களின் செயற்பாடுகளுடன் இராணுவத்தினை தலையிட செய்து இராணுவ ஆக்கிரமிப்பினை மேற்கொள்ள முயற்சித்தமை தவறானது.

யுத்த கால கட்டத்தில் விடுதலை புலிகளின் ஆக்கிரமிப்பினை கட்டுப்படுத்தி வடக்கு கிழக்கினை பாதுகாக்க இராணுவத்தினரின் உதவி தேவைப்பட்டது. விடுதலை புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை பாதுகாத்து விட்டோம். இப்போதும் யுத்தத்தை காரணம் காட்டி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடாகும்.

அதேபோல் தேர்தல் காலத்தில் வடக்கில் பொது மக்களின் வாக்களிப்பினை தடுக்கவும் அச்சுறுத்தல்களை செய்து தேர்தல் முடிவுகளை மாற்றவும் இராணுவத்தினரை பயன்படுத்தியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் எந்தளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. அவ்வாறு இராணுவத்தை பயன்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாடுகளில் எவரேனும் செயற்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் பொதுவாகவே இராணுவத்தின் உதவியுடன் தேர்தல் தலையீடுகளில் செயற்பட முக்கிய நபர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் சில தகவல்கள் கிடைக்க பெற்றிருந்தது. எனினும் நாம் முடிந்தளவு முயற்சி செய்து குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுத்து ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியுள்ளோம்.

மேலும் தற்போது நான் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்ததன் காரணத்தினால் சில முக்கிய விடயங்களில் நேரடியாக என்னை தொடர்புபட முடியாது. எனினும் தேசிய அரசாங்கத்தில் எனக்கும் பிரதான பங்கு உண்டு. தேசிய நிறைவேற்று சபையில் நானும் அங்கம் வகிக்கின்றமையினால் முக்கிய விடயங்களில் எனது ஆலோசனைக்கும் இடம் உண்டு. அதேபோல் வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும். தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாட்டில் இராணுவ செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்திற்கு நானும் இணக்கம் தெரிவிக்கின்றேன். அத்தோடு எமது கட்சியின் எதிர்கால திட்டங்களை கருத்திற்கொண்டு தேசிய அரசியல் அங்கம் வகிக்கின்றோம். தேசிய அரசுடன் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுமாயின் தனித்து செயற்படவும் தயாரான மனநிலையிலேயே செயற்பட்டு வருதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply