220 கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்ட பகுதியில் ஐ.எஸ். மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் 220 அஸ்ஸிரியன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வடகிழக்குப் பகுதியில் அந்த அமைப்பின் நிலைகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின. அந்த நாட்டின் ஹசாகா மாகாணம், தால் தமர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக சிரியா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு (எஸ்.ஹெச்.ஆர்.ஓ.) தெரிவித்தது.

எனினும், இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை அது தெரிவிக்கவில்லை.

தால் தமர் நகர் குர்துப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நிகழ்த்தி 10 கிராமங்களைக் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கிராமங்களில் வசித்த 220 அஸ்ஸிரியன் கிறிஸ்தவர்களைக் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் எனக் கூறப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலுள்ள பிற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் அங்கிருந்து வெளியேறி, குர்துப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காமிஷ்லி நகரில் தஞ்சமடைந்தனர்.

இந்தச் சூழலில், தால் தமர் நகரைச் சுற்றிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் அமெரிக்கக் கூட்டுப்படைகள் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply