விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணி மூன்று வாரத்தில் உரியவர்களிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அரசினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் காணிகள் மூன்று வாரங்களுக்குள் அந்தந்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். வளலாய் பகுதியில் மாதிரி கிராமம் அமைக்கும் விடயம் கைவிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடபகுதிக்குச் சென்றிருந்த அமைச்சர் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராய்ந்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுக் காலை சுமார் இரண்டு மணித்தி யாலங்கள் வடமாகாண ஆளுநர் பலிகக்கார, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்புப் படைத் தரப்பினர் உள்ளிட்டவர்களுடன் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கும் காணிகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இதற்கு அமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 1000 ஏக்கர் காணிகளும் மூன்று வாரங்களுக்குள் அந்தந்த காணி களின் உரிமையாளர்களிடம் கையளிக்கப் படும் என அமைச்சர் அறிவித்தார். இது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்க அதிபர், இராணுவ அதிகாரிகள் மற்றும் விசேட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று செயற்படும் என்றும் அமைச்சர் குறிப் பிட்டார்.

வளலாய் பகுதியில் அமைக்கப் படவிருக்கும் மாதிரி கிராமம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வளலாயில் மாதிரி கிராமம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டிருப்பதாகவும், எந்த கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் முதலில் குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6,152 ஏக்கர் காணியில் முதற்கட்டமாக 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கவும், இதில் 220 ஏக்கர் நிலப்பரப்பில் மாதிரிக் கிராமத்தை அமைத்து மக்களைக் குடியமர்த்துவதற்கும் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவித்திருந்தார்.

எனினும், புதிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளின் உரி மையாளர்களும் விரும்பவில்லை. விடுவிக்கப்படும் காணிகள் அந்தந்த காணி உரிமையாளர்களிடம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் தனது தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ததுடன், முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 1000 ஏக்கர் காணிகளும் அந்தந்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இது தொடர்பில் ஆராயும் நோக்கில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடபகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

வடமாகாண ஆளுநர், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்டவர்களுடன் நடத்திய சந்திப்புக்களுக்கு அமைய மூன்று வாரங்களுக்குள் 1000 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதாக அமைச்சர் அறிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply