அரசியல் தீர்வு, அடிப்படை பிரச்சினைகள் குறித்து மோடியுடன் பேச்சு நடத்துவோம் : சுமந்திரன்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ள நிலையில் சந்திப் பின்போது எவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் வினவியப்போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது எமது தரப்பின் சார்பில் பல முக்கிய விடயங்களை முன்வைக்கவுள்ளோம். குறிப்பாக நாம் தொடர்ச்சியாக கோரிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வலியறுத்துவோம். அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசின் ஈடுபாடு இருக்க வேண்டுமெனவும் இலங்கை இந்திய அனுமதியுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பது தொடர்பிலும் நாம்பேசுவோம்.
மேலும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகள் மிக மந்த கதியில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அதனை துரிதப்படுத்துவது தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கவனத்தில் கொண்டுவரவுள்ளதுடன் மீனவர் பிரச்சினை குறித்தும் முக்கியமாக கவனத்தில் கொண்டுவரவுள்ளோம்.
வட பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பும் மீன்பிடிப்பதற்கான அனுமதிகளும் தடைகளின்றி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். எனவே அதற்கான உடனடித்தீர்வு அவசியமானதென்பதை தெரிவிப்போம்.
அதேபோல் அனல்மின் நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கை அரசும் இந்திய அரசும் உடன்படிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் அவை வடக்கு மக்களை பாதிக்காத வகையிலும் மீள் குடியேற்றத்தினை பாதிக்காத வகையிலும் நடைபெற வேண்டுமென்பதனை தெரிவிப்போம். இன்னும் பலமுக்கிய விடயங்கள் தொடர்பிலும் பேசவுள்ளோம்.
அத்தோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் ஏற்பாடுகளை ஆராயும் நோக்கில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜூடனும் நாளை மதியம் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இப்பேச்சுவார்த்தைகளில் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.இதன்போது மீனவர் பிரச்சினையை பிரதானப்படுத்தி பேசுவதுடன் ஏனைய ஒரு சில அரசியல் காரணிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply