அரசியலில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் :சம்பந்தன்
எமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக எமது, மக்களின் மத்தியில் பல்வேறு கேள்விகள், பல சந்தேகங்கள் உள்ளன. நாங்கள் ஒரு தனித்துவமான மக்கள். எமது கலாசாரத்தை, பண்பாட்டை, அபிவிருத்தியை மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வகையில் ஒரு நீதியான தீர்வு அமைய வேண்டும். அதனை பெறுவதற்கு நாம் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளோம். இவ்விதமான தீர்வுக்கு முஸ்லிம் மக்களும் உதவ வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
“கேட்காத குரல்கள்” எனும் குறுந்திரைப்பட அங்குரார்ப்பண நிகழ்வு திருகோணமலை விவேகானந்தாக்கல்லூரியில் நடைபெற்றது. அதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண சபை சம்பந்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை மிகவும் பக்குவமாக நடந்திருக்கின்றோம். 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சரை தரத் தயார் என்று எமது மேடைகளில் பகிரங்கமாக கோரினோம். ஏனென்றால் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் தலைவர்.
அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடாமல் வெளியேறி தனியாக போட்டியிட்டார். அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். அந்த அடிப்படையிலேயே அவர்களோடு ஒன்றாகச்சேர்ந்து ஆட்சி அமைக்க தயாரானோம். அதன் காரணமாகவே முதலமைச்சர் பதவியை அவர்களுக்கு வழங்கவும் தயாராகவிருந்தோம். தேர்தல் முடிந்த பிறகு எமக்கு 11 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸிற்கு 7 ஆசனங்களும் கிடைத்தன. மொத்தமாகவுள்ள ஆசனங்கள் 37, ஐ.தே.கட்சிக்கு 4 ஆசனங்கள் கிடைத்தன. ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் எங்களுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்குமாறும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார். எனினும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கிழக்கு மாகாண ஆட்சி குழம்பியது. அதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது நாங்கள் அவர்களுக்கு கூறினோம். எங்களுக்குத்தான் பெரும்பான்மையுள்ளது. நாங்கள் தான் முதலமைச்சரை எடுப்போம் என்று சொன்னோம்.அதற்கு அவர்கள் உடன்படவில்லை. யாரோடு வேண்டாம் என்று பிரிந்தார்களோ அவர்களுடனே மீளவும் ஆட்சியமைத்தார்கள்.
முதலமைச்சர் பதவியை எடுத்தார்கள். ஜனாதிபதியுடன் பிரிந்து போட்டியிட்ட அவர்கள் மீண்டும் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தார்கள். எங்களுடனும் பேசினார்கள். நான் எமது மாகாண சபை உறுப்பினர்களுடன் பேசச் சொன்னேன். அதில் ஏற்பட்ட உடன்பாட்டினடிப்படையில் மீண்டும் அவர்களுடன் சேர்ந்தோம். அவர்களுக்கு ஆதரவு தந்த 07 பேர் வெளியேறினார்கள்.
என்னை வந்து வீட்டில் சந்தித்த வெளியேறிய பிரிவினர் உங்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்கத்தயார். உங்களுக்கு முதலமைச்சரை வழங்க தயாராகவுள்ளோம் எனச் சொன்னார்கள். வாக்குறுதியும் தந்தார்கள். ஆனால், நாங்கள் விரும்பவில்லை. எமது மாகாண சபையினர் கூடினார்கள். பழைய நிலைமையைத் தொடர்வதென விரும்பினார்கள்.
அந்த முடிவின் அடிப்படையில் தற்போது எமது அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார்கள். ஆகவே முஸ்லிம் மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக தமிழ் மக்களும் முஸ்லிம்களும் சிந்தித்து செயற்படும் போது இவ்விதமான குழப்பங்களுக்கும் இடம் இருக்காது. இந்தக்குழப்பங்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும். அதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமென நான் கருதுகின்றேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply