வடக்கு மாகாண சபை வெளிப்படைத் தன்மை கொண்டதா?: EPDP
வடக்கு மாகாண சபையானது எமது மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு இன்று சுமார் ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அம் மாகாண சபையின் ஆளுந் தரப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தொடர்ந்தும் தங்களது சுயநலம் சார்ந்த வறட்டுப் பிடிவாதங்களால் காலங்கடத்த முயற்சிக்கினறார்களே அன்றி, மக்கள் நலன் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்வருவதாக இல்லை. முன்னாள் ஆளுநருக்கும் தமக்கும் இடையில் பிரச்சினை என்றார்கள். பிரதம செயலாளருக்கும் தமக்கும் இடையில் பிரச்சினை என்றார்கள்; அரசுக்கும் தமக்கும் இடையில் பிரச்சினை என்றார்கள். இவை அனைத்திலும் இன்று மாற்றங்கள் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் பிரச்சினை என்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 25ம் திகதியைக் கொண்ட தினக்குரல் பத்திரிகையில் “காலகண்டன்’’ எழுதிய கட்டுரை, வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கூறும் கருத்தக்களை அவதானிப்போம்.
“மைத்திரி – ரணில் ஆட்சியின் நூறு நாட்கள் திட்டத்தை விமர்சிக்கும்போது, வடக்கு மாகாண சபையின் ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ள சுத்தத் தமிழர் ஆட்சி பற்றி ஏன் விமர்சிக்கக் கூடாது என்றொரு நியாயம் மேலெழுகிறது. எனவே, வட மாகாண சபையின் சகல உறுப்பினர்களும், அதன் தலைமை ஆசனங்களில் இருக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்கள் என்போர் மக்களுக்கு நேர்மையாக பதில் கூறியே ஆக வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் என்று மிக உயர்வாக அவ்வப்போது உச்சரிக்கப்படுகிறது. அதில் ஒன்றே வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் ஆகும்.’’ என காலகண்டன் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.
வெளிப்படைத் தன்மை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாங்கள் வெளிப்படைத் தன்மை கொண்டவர்கள் என அடிக்கடி கூறுவார். ஆனால், அது எதில்? என்பதுதான் கேள்வி.
அடுத்தது பொறுப்பு கூறல். இதில் இரண்டு விடயங்கள் அவதானத்திற்கு உரியன. ஒன்று, பொறுப்பாகுதல். அடுத்தது, பொறுப்பு கூறுதல். இந்த இரண்டிற்கும் வடக்கு மாகாண சபையின் மேற்குறிப்பிட்ட நபர்கள் கட்டுப்பட்டவர்களாகவே உள்ளனர்.
“காலகண்டன்’’ மேலும் குறிப்பிடும்போது,
“மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான இன்றைய முதலமைச்சர், உறுப்பினர்கள் உட்பட கூட்டமைப்பின் தலைவர்கள் என்போர் பேசிய பேச்சுக்களையும், வசனங்களையும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டும்.
“மகிந்தவிற்கு மட்டுமன்றி சிங்களவருக்கும் பாடம் படிப்பிக்க வேண்டும்.’’
“தமிழர் பிரதேசத்தில் தமிழர் ஆட்சி நிலவ வேண்டும்.’’
“துரோகிகளும், ஒட்டுக் குழுக்களும் பதவிக்கு வரவிடல் கூடாது.’’
“தமிழ் மக்களே உங்கள் வாக்குப் பலத்தை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டுங்கள்.’’
என்று முழங்கியே மாகாண சபைக்கு வெற்றி பெற்றனர். ஆனால், இன்று ஒரு வருடமும், ஏழு மாதங்களும் முடிவுறும் தருவாயில் இதுவரை இருபத்தியேழு அமர்வுகளை மாகாண சபை நடாத்தியுள்ளது.
அதன் பெறுபேறுகள் யாவை?
தமிழ் மக்களது துயர் மிகுந்த அன்றாட வாழ்வில் மாகாண சபை ஆட்சி எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த இரு கேள்விகளும் பிரதானமானவை. இவற்றுக்கு வெளிப்படைத்தன்மை கொண்ட மாகாண சபையினர் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply