வங்காளதேசம் சென்ற மோடிக்கு டாக்கா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி வங்காள தேசத்தில் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று டாக்கா சென்றார். இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் மேற்குவங்காள மாநிலத்தின் அருகில் உள்ளது. பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. 1971–ல் கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை மூலமாக நசுக்க முயன்றது. இதில் இந்தியா படைகளை அனுப்பி தலையிட்டதால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று வங்காள தேசம் என தனி நாடாக உதயமானது.
வங்காள தேசத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை, நதிநீர் பங்கீடு சட்ட விரோத குடியேற்றம் உள்பட பல பிரச்சனைகள் உள்ளது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் வங்காள தேசத்துடனான 4,096 கி.மீ.தூர இந்திய எல்லையை வரையறை செய்ய தீர்மானம் கொண்டு வந்து ஒப்புதல் பெறப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தம் செய்யவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேச்சு நடத்தவும் பிரதமர் மோடி வங்காள தேசத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் டாக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு ராணுவ அணி வகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தில் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார். அவர் நேற்று இரவே டாக்கா புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி வருகையையொட்டி டாக்கா நகர் முழுவதும் அவர்களது கட்–அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் தங்கியிருக்கும் இடம் வரை வழிநெடுக கட்–அவுட்கள் இடம் பெற்று இருந்தது.
1971–ல் வங்கதேச போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படங்களுடன் கூடிய பெரிய கட்–அவுட்களும் வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் டாக்கா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரதமர் மோடி வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் எல்லைப் பிரச்சனை தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இதன் மூலம் இந்திய எல்லையை சிறப்பாக நிர்வகிக்க முடியும். சட்ட விரோதமாக இடம் பெயர்வோர் மற்றும் கடத்தல் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும்.
நில எல்லை வரையறை ஒப்பந்தம் தவிர இருநாட்டு மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையிலான பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.
வங்கதேசத்துடன் ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்துக்கான ஒப்பந்தம், கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம், வங்க தேசத்தில் இந்திய நிறுவனங்கள் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு வகை செய்யும் ஒப்பந்தம் என பல்வேறு வகை ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.
மேலும் கொல்கத்தா– டாக்கா–அகர்தலா இடையிலான பஸ் போக்குவரத்தை பிரதமர் மோடியும், ஹசீனாவும் தொடங்கி வைக்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply