கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து போர் நிறுத்த ஒபந்தம் மீறி தாக்குதல்
கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல்களை நிறுத்தும் ஒப்பந்தத்தை அரசுத் தரப்பும், கிளர்ச்சியாளர் தரப்பும் தொடர்ந்து மீறி வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் குண்டு வீசப்பட்டதால் பல வீடுகள் தீ பற்றி எரிந்தன. உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பெற்ற பகுதியான க்ரைமியாவை பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலம் ரஷ்யா கடந்த ஆண்டு தன்வசப்படுத்தியது. அதன் பின் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் உட்பட சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என பிரிவினைவாதிகள் கோரினர்.
உக்ரைன் அரசு இதற்குச் சம்மதிக்கவில்லை என்ற நிலையில், இருதரப்புக்கும் இடையே தாக்குதல் நடந்தது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் தாக்குதலை நிறுத்துவதாக இருதரப்பு அறிவித்தாலும் அவ்வப்போது இந்த அறிவிப்பு மீறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டதால் பல வீடுகள் தீ பற்றி எரிந்தன.
தினமும் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெறுவதாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, மின்ஸ்க்கில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் முழுமையாகக் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே கிழக்கு உக்ரைன் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என இத்தாலி பிரதமரும், ரஷ்ய அதிபரும் கூட்டாக அறிவித்திருக்கின்றனர்.
உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா மறைமுகமாக உதவிவருவதாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இரு தலைவர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply