மாயமான விமானம் குறித்து ஓரிரு நாளில் முழுமையான விவரம் தெரியவரும்: கடலோர காவல் படை அதிகாரி தகவல்
சென்னையில் இருந்து கடந்த 8-ந்தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் 3 பேருடன் மாயமானது. விமானம் காணாமல் போய் 15 நாட்கள் ஆகிவிட்டது. இந்த விமானம் சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் பகுதியில் விழுந்திருப்பது கண்டறியப்பட்டது. அந்தப்பகுதியில் கப்பல் மற்றும் விமானம் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிநவீன பல்நோக்கு ஆராய்ச்சிக் கப்பலான ‘ஒலிம்பிக் கேன்யான்’ சம்பவ பகுதியில் கடலுக்கு அடியில் வீடியோ படம் எடுத்து தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாயமான விமானத்தை 12 இந்திய கடலோர பாதுகாப்புப்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் 6 கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றுடன் நவீன தொலைதொடர்பு வசதிகள் கொண்ட ‘சாகர்நிதி’ என்ற கப்பலில் இருந்து தொலை தொடர்பு கருவிகள் மூலம் ‘மாயமான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் எதாவது வருகிறதா? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சிக்னல் கள் விட்டு, விட்டு வந்ததால் நம்பகத்தன்மையான தகவல் கள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே இந்த சாகர்நிதி கப்பலை திரும்ப பெற்றுவிட்டு தற்போது, ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் உள்ள ‘ரிமோட்லி ஆபரேட்டிங் வெசல்’ என்ற நவீன கருவியில் உள்ள எக்கோ சவுண்டர் என்ற எதிரொலிக் கருவி, நீர்மூழ்கிக் கேமரா, ஒளி வெள்ள விளக்குகள், வீடியோ படப்பிடிப்புக் கருவிகள் மூலம் ஆழ்கடலில் இருண்ட பகுதிகளில் படங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
சிதம்பரம் நகரத்தின் கிழக்கே 16 கடல் மைல் தூரத்தில் தான் மாயமான விமானம் விழுந்திருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளதால், தேடும் பகுதியும் 343 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக குறைக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் மாயமான விமானம் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply