பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பெண்கள் கிறிஸ்வத கல்லூரி தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நூற்றாண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நூற்றாண்டு விழாவின் அடையாள சின்னத்தை (லோகோ) அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது:- தமிழ்நாடு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முன்னணியில் உள்ளது. மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஹால்மார்க் போன்ற முத்திரையுடன் விளங்குகிறது. அதில் நானும் பயன் அடைந்துள்ளேன்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியும் தன் பங்களிப்பை செவ்வனே செய்துள்ளது. இந்த கல்லூரியில் படித்த பெண்கள் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதற்கு காரணம் இந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள் அளித்த அர்ப்பணிப்பு தான் ஆகும். அவர்களை நினைத்துப்பார்க்கவேண்டும்.
இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவிகள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். தரமான கல்வியை இந்த கல்லூரி அளித்து வருகிறது. நூற்றாண்டுவிழா சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் கலந்துகொண்டு 100-வது மரக்கன்றை நட்டார்.
விழாவில் முன்னாள் மாணவிகளான ஆந்திராவில் உள்ள தேசிய போலீஸ் பயிற்சி கல்லூரி இயக்குனராக பணியாற்றும் அருணா பகுகுணா, வன இலாகா அதிகாரியாக இருக்கும் ஏஞ்சலின் பிரேமலதா மற்றும் டாக்டர் ஸ்ரீலதா சகீர், மல்லிகா சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கல்லூரி சங்க தலைவர் ஆபிரகாம் சகாரியா உள்பட பலர் பேசினார்கள். கல்லூரியின் முதல்வர் ரிட் லிங் மார்கிரேட் வாலர் வரவேற்றார்.
கல்லூரியின் முன்னாள் மாணவிகளும், இப்போதைய ஆசிரியர்களும், மாணவிகளும் மேடையில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். முன்னாள் மாணவி ஒருவர் வயதானபோதிலும் திறமையுடன் பியானோ வாசித்தார். விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூற்றாண்டுவிழாவையொட்டி 100 மாணவிகள் சைக்கிள்களை ஓட்டிச்சென்றனர்.
விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளைச்சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply