எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆற்றலும், விருப்பமும், போதிய அரசியல் பலமும் வேண்டும் : தேவானந்தா

எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமிழ்த் தலைமைகளிடம் ஆற்றலும், விருப்பமும் இருக்க வேண்டும். அவை எம்மிடம் உள்ளன. அதனால் எமது மக்களின் பல தேவைகளை எம்மால் பூர்த்தி செய்ய முடிந்தது. ஆனால், போதிய அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால்; அரசியல் தீர்வு உட்பட இன்னும் பல விடயங்களை எம்மால் செய்திருக்க முடியும். எனினும், போதிய அரசியல் பலமிருந்தும் அந்த ஆற்றலும், விருப்பமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லாததால் அவர்களால் எமது மக்களின் தேவைகளில் எதையுமே பூர்த்தி செய்ய முடியவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 5ம் திகதி வவுனியா ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இடம்பெற்ற அம் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஈ.பி.டி.பியின் கொள்கை. மத்தியில் நாம் கூட்டாட்சி நடத்திய போது, நான் வடக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக இருந்த நிலையில், இப்பகுதியின் அபிவிருத்தி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கியிருந்தேன். மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் அதிகாரம் எமக்குக் கிடைத்திருக்கவில்லை. ஆனால் இந்த இரு அதிகாரங்களும் கிடைத்திருக்கும் நிலையில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எமது மக்களுக்கென எதையும் செய்ய முடியவில்லை.

அரசியல் அதிகாரங்கள் ஈ.பி.டி.பியினராகிய எமது கரங்களுக்கு கிட்டிவிடக் கூடாது. கிட்டிவிட்டால் எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் பூர்த்தி செய்யப்பட்டு விடும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் தங்ளுக்கு அரசியல் இருப்பு கிடைக்காது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரரின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களிடம் அடுத்தடுத்து பொய்களைக் கூறி, வாக்குகளை அபகரித்து வருகின்றனர்.

எமது மக்களுக்கு நாம் செய்துள்ள உதவிகள் எண்ணிக்கையில்லாதவை. அது எமது மக்களுக்குத் தெரியும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்காக இதுவரையில் எதுவுமே செய்யவில்லை. இதுவும் எமது மக்களுக்குத் தெரியும்.

இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு பெற வேண்டியவற்றை வென்றெடுக்க வேண்டும். இதுவே நடைமுறைச்சாத்தியமான ஈ.பி.டி.பியினராகிய எமது அரசியல் நிலைப்பாடு. எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்னால் போனால், இருப்பதையும் இழந்து, ஏதமற்றவர்களாகிப் போக வேண்டும். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாங்கள் மற்றும் அரசுகளிடமிருந்து எல்லாவற்றையும் பெற்று, சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் நிலைப்பாடும், செயற்பாடுமாகும்.

உங்களது அனைத்துத் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்வோம். அதற்கு உங்களது உழைப்பு தேவை. எமது அரசியல் பலத்திற்கான உங்களது உழைப்பு தேவை.

நீங்கள் தரும் அரசியல் பலமே, உங்களுக்கான எங்களது சேவையின் விளைநிலம் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply